சினிமாத்துறை,சமூகம் சார்பானதாக மாறிவிட்டதால் தான் தனக்கு 8 ஆண்டுகளாக வாய்ப்புகள் குறைந்து விட்டது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர். இவர் பல்வேறு மொழிகளில் இசை அமைத்து மக்களின் இதயத்தை வென்றவர். இவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்று இந்தியத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் தமிழ் மற்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு எதிராகப் பாகுபாடு நிலவுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாகத் தனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதற்குக் காரணம், சினிமாத்துறை இப்போது சமூகம் சார்ந்ததாக மாறிவிட்டதுதான் என்று கூறியுள்ளார்.
"இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்" என்றும் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திரைத்துறையுடன் தொடர்புடைய பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் ஷோபா டே கூறுகையில், "இவருடைய கருத்து அபாயகரமானது. ஏன் அவர் இப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த 50 ஆண்டுகளாக பாலிவுட்டை பார்த்து வருகிறேன். சமூக ரீதியான பதட்டம் இல்லாத ஒரே இடம் பாலிவுட் மட்டும் தான். திறமை இருந்தால் வாய்ப்பு கிடைக்கும். திறமை இல்லையெனில் கிடைக்காது. அதற்கு சமூகம் ஒரு காரணியாக இருக்க முடியாது. இவ்வளவு திறமையான, பக்குவப்பட்ட ஒருவர், இப்படி சொல்லி இருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
பிரபல திரைக்கதை ஆசிரியர் ஜாவேத் அக்தர், "ரஹ்மான் பெரிய இசையமைப்பாளர். பலரும் அவரை மதிக்கிறார்கள். பலரும் அவரை நம்மால் கையாள முடியாது என்று அச்சப்படுகிறார்கள். இதனால் தான் பலரும் அவரிடம் இருந்து தள்ளி இருக்கிறார்கள்" என்று கூறினார். மேலும் அவர் ரஹ்மான் கூறியதை தன்னால் ஏற்க முடியாது என்றும், சினிமாத்துறை சமூக சார்புடையதாக மாறிவிட்டதாக தான் கருதவில்லை என்றும், ரஹ்மான் இப்படி ஒன்றை சொல்லி இருக்கிறார் என்பதையே தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில் தனது எமர்ஜென்சி படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்கச் சென்ற பொழுது, ரஹ்மான் தன்னை சந்திக்கவே மறுத்துவிட்டார் என்றும், பிரச்சார படத்துக்கு பணியாற்ற முடியாது என்றும் கூறி விட்டதாகவும், ரஹ்மான் போன்ற பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதரை தான் கண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு வீடியோ வெளியிட்டு பதிலளித்துளார் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்தி திரைப்படத் துறையில் 'சமூக பாகுபாடு' தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் சர்ச்சையாகி,பேசு பொருளானது. கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் அவர், "அன்புள்ள நண்பர்களே, இசை என்பது கலாச்சாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா எப்பொழுதுமே என் வீடு, எனது ஆசிரியர் மற்றும் எனது உந்துகோலாக உள்ளது. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் இப்பொழுது புரிந்து கொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்பொழுதும் என் நோக்கமாக இருந்து வருகிறது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் கிடையாது. என் எண்ணம் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.