'மறக்குமா நெஞ்சம்' புலம்பிய ரசிகர்கள்!

A R.Rahman
A R.Rahman

றக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு, மாநிலம், மாவட்டம் என பல எல்லைகளை கடந்து வந்த ரசிகர்களின் புலம்பல்களால் சமூகவலைதளங்கள் நிறைந்தன. வேதனையை சொன்ன ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் கிண்டல் பதிவுகளை போட்டவர்களுக்கு தக் லைஃப் பதில்களையும் அளித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களுக்கு மட்டுமின்றி அவரின் கான்செட்டுகளுக்கும் இவ்வளவு Hard Core ரசிகர்கள் உள்ளனர் என்பதையும் இதை காண நாடு கடந்து கூட பறந்து வருகிறார்கள் என்பதையும் ஒரு நாள் பெய்த அடைமழை நிரூபித்து உள்ளது.

எப்போ, எப்போ என ரசிகர்களை நீண்ட நாட்களாக காக்க வைத்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நடைபெற இருந்தது.

திறந்தவெளியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் இசைமழையில் நனைய வந்தவர்களுக்கு இடையூறாக வந்த வான்மழையால் நிகழ்ச்சி ரத்தானது. வேறொரு நாளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் அறிவித்தனர்.

அதனால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் சாரைசாரையாக திரும்பிச் செல்ல, போக்குவரத்து நெரிசலால் சாலைகளும், ரசிகர்களின் புலம்பல்களால் சமூகவலைதளங்களும் திணறின.

வேலைக்கு 2 நாள் லீவு போட்டு  வந்தேன், திரும்பவும் எப்படி லீவு கேட்பது என்ற புலம்பல்கள் ஒரு பக்கம், இந்த இசை நிகழ்ச்சிக்காக ஜெர்மனியில் இருந்து வந்தேன், பெங்களூருவில் இருந்து வந்தேன், மதுரையில் இருந்து வந்தேன் என்ற ஆதங்கங்கள் மறுபக்கம் என ரசிகர்கள் புலம்பி தீர்த்து விட்டனர்.

ஒரு சிலருக்கு ஏ.ஆர்.ரகுமானே நேரடியாக பதிலளித்து, அவர்களை அசுவாசப்படுத்தி உள்ளார். மெல்ல திறந்த கதவு படத்தில் புதைக்குழியில் சிக்கிய அமலாவின் புகைப்படத்தை  போட்டு வேதனையை கூறிய ரசிகைக்கு, Safty First என தக் லைஃப் பதில்களையும் அளித்திருந்தார்.

மேலும், ரசிகர் ஒருவரின் பதிவுக்கு, இது போன்ற அசவுகரியங்களை தவிர்க்க பெரிய அளவிலான கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை சர்வதேச அளவில் வழங்குவதற்கு ஏற்ப  உள்கட்டமைப்புகளை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்திருந்தார். இதற்கு அரசு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  

இதற்கு பதலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்த நீண்ட நாள் ஆசையை சென்னை விரைவில் நிறைவேற்றும் என்று கூறியிருந்தார்.

ECR இல் நிறுவப்படும் Kalaignar Convention Centre, பிரம்மாண்ட நிகழ்ச்சிகள்,  கண்காட்சிகள், மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வசதியாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த பதிவு, ஏ.ஆர்.ரகுமானின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த நல்ல பதிலாக இருந்தாலும் மீண்டும் எப்போது நடைபெறும் என்பதே டிக்கெட்டுடன் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com