Aranmanai 4 movie review in tamil
Aranmanai 4 movie review in tamil

விமர்சனம் - அரண்மனை 4 - இது 'பழைய பல்லவி பாடும்' பேய் இல்லை… அதுக்கும் மேல! 

Published on
ரேட்டிங்(3 / 5)

அழகான பொண்ணுங்க மேல பேய் வந்துடும், அந்தப் பேய் பெண்ணா இருக்கும்போது நாலு பேர் சேர்ந்து கொலை பண்ணியிருப்பாங்க. ஒரு சாமியார் வந்து பேயை விரட்டுவாரு. இப்படி சுந்தர் சி. யின் முந்தையை அரண்மனை படங்கள் மாதிரிதான் அரண்மனை 4ம் இருக்கும் என நினைச்சுகிட்டே போய் தியேட்டர்ல்ல உட்கார்ந்தா, நீங்க நினைக்கற மாதிரி கிடையாது, இது வேற என ட்விஸ்ட் வைக்கிறார் டைரக்டர் சார். அது என்ன விஷயம் என தனது பாணியில் சொல்லி இருக்கிறார்.

Sundar C and Tamannaah Bhatia
Sundar C and Tamannaah Bhatia

தமன்னாவும் அவரது கணவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுறாங்க. அதன்பிறகு சில அமானுஷ்யங்களும், பயமுறுத்தல்களும் அந்தப் பங்களாவில் நடக்கின்றன. இறந்துபோன தனது தங்கை தமன்னாவின் சாவில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் அண்ணன் சுந்தர். சி. கிராமத்தில் இங்கேயும், அங்கேயும் போய்க்கொண்டிருந்த ஒரு சாமியாரைச் சந்தேகப்பட்டு பிடித்து விசாரிக்கிறார்கள். இது பேய் இல்லை. கடவுளுக்கு எதிரான பேய் போன்ற ஒரு தீய சக்தி என்பதை தெரிந்துகொள்கிறார். இந்த தீயச் சக்தியை விரட்டுவதுதான் கதை.

Tamannaah Bhatia and Raashii Khanna
Tamannaah Bhatia and Raashii Khanna

இதற்கு முன்பே பல அரண்மனைகளில் சுந்தர் C பல தீயச் சக்திகளை அழித்துள்ளதால், இந்த நான்காம் பாகத்தில் உள்ள தீயச் சக்தியையும் எப்பாடு பட்டாவது அழித்து விடுவார் என்று நமக்கு படம் ஆரம்பிக்கும்போதே தெரிந்து விடுகிறது. இருப்பினும் படத்தின் முதல் பாதி நன்றாகவே நம்மைப் பயமுறுத்துகிறது. வழக்கம்போல கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் பேயாக வந்து பலி வாங்கும் பழைய பல்லவியைப் பாடாமல் ஒரு வித்தியாசமான புது முயற்சியைச் செய்திருக்கிறார் சுந்தர். படத்தில் வரும் காடும், அரண்மனையும் நிறையவே பயமுறுத்துகிறது. இரண்டாவது பாதி பழைய அரண்மனைகளின் காட்சிகளை ரிப்பீட் மோடில் பார்ப்பது போல உள்ளது. இரண்டாம் பாதி திகிலைவிட காமெடியே ஆளுமை செய்கிறது.

Kovai Sarala, VTV Ganesh, Yogi Babu
Kovai Sarala, VTV Ganesh, Yogi Babu

கோவை சரளா, VTV கணேஷ், லொள்ளு சபா ஷேசு, யோகிபாபு என நகைச்சுவை பட்டாளமே தியேட்டர் அதிர சிரிக்க வைக்கிறது. என்னதான் நான் குத்தாட்டம் போட்டாலும் எனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்று சொல்லி அடித்திருக்கிறார் தமன்னா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், குழந்தைகளைப் பிரிந்து தவிக்கும்போதும் அட தமன்னா இப்படி எல்லாம் கூட நடிப்பாங்களா என்று சபாஷ் போட வைக்கிறார். சுந்தர். C வழக்கமான நடிப்பையே தந்துள்ளார். கே. ஜி. எப் படத்தின்  டெரர் வில்லன் ராம் இந்த அரண்மனையில் சாமியாராக வருகிறார். இவரின் நடிப்பு ஒகே ரகம். ராஷி கண்ணா வந்து போகிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - குரங்கு பெடல் – குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!
Aranmanai 4 movie review in tamil

கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவில் கோணங்கள் சிறப்பாக உள்ளன. கோணங்களைவிட லைட்டிங் சிறப்பாக உள்ளது. படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் திகில் அனுபவத்தில் இந்த லைட்டிங்கின் பங்கு மிக முக்கியமானது. பென்னி ஓலி வெரின்  பட தொகுப்பு கட்சிதம். சுந்தர் C யின் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் ஹிப் பாப் தமிழா ஆதிதான் இந்தப் படத்திற்கும் இசை. திகிலுக்கு ஆதியின் பின்னணி இசை ரொம்பவே கைகொடுக்கிறது. ஆனால், பாடல்களில் கைகொடுக்கவில்லை. (ஆதி ஹீரோவாக நடிப்பதற்கு பதில் இது போன்று இசையில் கவனம் செலுத்தினால் இன்னும் நல்ல படங்களைத் தரலாம்)

சுந்தர் C யின் முந்தைய அரண்மனை படத்தில் கிளைமேக்ஸில்  குஷ்பூ நடனம் ஆடுவார். இந்தப் படத்திலும் குஷ்பூ மட்டும் மீண்டும் நடனம் ஆடினால் டைரக்டர் தன் வீட்டுக்காரம்மாவுக்கே சான்ஸ் தருகிறார் என்று யாரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காக சிம்ரனையும் டான்ஸ் ஆட வைத்துள்ளார். குஷ்பூவும், சிம்ரனும் சேர்ந்து கிளைமேக்ஸில் அம்மன் பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள். அரங்கத்தில் விசில் பறக்கிறது.

அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட் என படத்தில் சென்டிமென்ட்களுக்கு பஞ்சமில்லை. படம் முடிந்து எழுந்தவுடன், ராஷி கண்ணாவும் தமன்னாவும் ஒரு கிளாமர் பாட்டுக்கு  ஆடுகிறார்கள். இதை எதற்கு வைத்தார் டைரக்டர் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். லாஜிக் பார்க்காமல், பயம், காமெடி கலந்து  வந்துள்ள இந்த அரண்மனையை ரசிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com