இந்தியாவில் ஒரு பாடகர் இரண்டு மணி நேரம் மட்டும் பாடுவதற்கு ₹14 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என்றால் அவர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாகத்தானே இருக்கும்?
நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரது குரலுக்கு உண்டு. அவரது காதல் பாடல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆயினும் அவர் வாங்கும் சம்பளத்திற்கு தகுதியானவர் தான். ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் பாடகரான அர்ஜீத் சிங் தான் நாட்டின் அதிக சம்பளம் பெறும் பாடகராக இருக்கிறார்.
அர்ஜித் சிங்கின் இசைப் பயணம் 2005 ஆம் ஆண்டு ஃபேம் குருகுல் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் தொடங்கியது. அவர் சினிமாவில் முதல் வாய்ப்பை 2011 ஆம் ஆண்டு மர்டர் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலம் அறிமுகமானார். பிறகு பாலிவுட்டில் பெருவெற்றி பெற்ற காதல் இசைத் திரைப்படமான ஆஷிகி 2 திரைப்படத்தில் புகழ்பெற்ற தும் ஹி ஹோ பாடல் மூலம் மிகவும் விரும்பப்படும் பாடகரானார். தமாஷா திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அகர் தும் சாத் ஹோ என்ற பாடலின் மூலம் இசையுலகின் உச்சத்தை தொட்டார். அதன் பின்னர் அர்ஜீத் சிங் தொட்டது எல்லாம் பெரும் வெற்றியாக இருக்க , இசையுலகில் சிகரம் ஏறத் தொடங்கினார்.
அர்ஜித் சிங் பெரிய வெற்றியை பெற்ற போதிலும் எப்போதும் தன்னடக்கமாக இருப்பது தான் அவரது ஆளுமையாக பார்க்கப்படுகிறது. அவர் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார். அவரது சாதனைகள் மூலம் அதிகம் பேசுகிறார். பாடல் செயலியான ஸ்பாட்டிஃபையில் மிக அதிகம் பேர் பின்தொடரும் இசைக் கலைஞராக அவர் உள்ளார். மொத்தமாக 140 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் அவர் கொண்டுள்ளார்.
இந்தியாவில் அரிஜித் சிங்கின் இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விலைகள் ₹ 2,000 முதல் ₹ 80,000 வரை உள்ளது. அதே நேரம் புனேவில் அவரது இசை நிகழ்ச்சியின் பிரீமியம் லாஞ்ச் டிக்கெட்டுகள் ₹16 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அர்ஜித் இரண்டு மணி நேர மேடை நிகழ்ச்சிக்கு ₹ 14 கோடி வரை சம்பளம் பெறுவதாக பாடகர் ராகுல் வைத்யா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
விரைவில் லண்டனில் உள்ள , புகழ்பெற்ற டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார் அர்ஜித் சிங். இந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்க பொது நுழைவு டிக்கெட்டின் விலை 210 பவுண்டில் இருந்து 2,410 பவுண்ட் வரை உள்ளது.
அர்ஜீத் சிங்கின் நிகர சொத்து மதிப்பு ₹ 414 கோடி என்று சில தரவுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் அவர் பெரும்பாலும் மேற்கு வங்கத்ததின், மூர்ஷிதாபாத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். மேலும் இங்கு ஹெஷெல் என்ற மலிவு விலை உணவகத்தையும் நடத்தி வருகிறார். இங்கு ஒருவேளை உணவு ₹40 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.