அஸ்வின்ஸ் - பயம் பயம் மட்டுமே!

அஸ்வின்ஸ் - பயம் பயம் மட்டுமே!
Published on

ஹாலிவுட் தரத்தில் ஒரு திகில் கலந்த பேய் படத்தை தர முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள் அஸ்வின்ஸ் பட குழுவினர். தருண் தேஜா அஸ்வின்ஸ் படத்தை இயக்கி இருக்கிறார். BVSN பிரசாத் படத்தை தயாரித்து உள்ளார். தரமணி, ராக்கி படங்களில் ஹீரோவாக நடித்த வசந்த் ரவி இப்படத்தில் ஹீரோ வாக நடிக்கிறார்.

வேதங்களில் சொல்லப்பட்ட அஸ்வின் என்ற இரட்டை தெய்வங்களை மைய்யமாக வைத்து கதை தொடங்குகிறது. ஒரு யூடியூப் சேனலுக்கு லண்டனில் உள்ள அமானுஷ்ய மேன்ஷனில் ஆராய்ச்சி செய்ய  அழைப்பு வருகிறது. நான்கு பேர் கொண்ட குழு அந்த மேன்ஷனுக்கு செல்கிறது.சில கொலைகளும், ஒரு  தற்கொலையும் நடந்த அந்த கட்டிடத்தில் சேனலுக்காக ஆராய்ச்சி செய்கிறது இந்த குழு. ஒவ்வொருவரும்  மிக மோசமான,பயமுறுத்தும் அனுபவங்களை சந்திக்கிறார்கள்.

ஹீரோ அர்ஜுனை தவிர (வசந்த் ரவி) மற்ற அனைவரும் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள்.இதற்கெல்லாம் யார் காரணம், இதன் பின்னணியில் இருப்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஹீரோ. ஒட்டு மொத்த படத்தையும் தாங்கி பிடிப்பது தொழில் நுட்பம் தான். கதவு திறக்கும் போது வரும் சப்தம், பின்னால் ஒலிக்கும் அமானுஷ்ய ஒலிகள், என பல சப்தங்களை வைத்து  பார்வையாளர்களை நிறையவே பயமுறுத்தி இருக்கிறார்கள் சப்த வடிவமைப்பாளர்கள் சச்சின் மற்றும் ஹரி.எட்வின் சாக்கேவின் ஒளிப்பதிவு அமர்க்களம் என்றே சொல்லலாம். நிலப் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் செல்வது, சிலுவை மூழ்குவது, கட்டிடத்தில் ஒரு சிறிய வெளிச்சம் மூலம் அமானுஷ்யத்தை உணர வைப்பது என பல அம்சங்கள் ஒளிப்பதிவை சபாஷ் போட வைக்கின்றன.வசந்த் ரவியின் நடிப்பில் முந்திய படங்களை விட பக்குவம் தெரிகிறது. விமலா ராமன்,சரஸ்வதி மேனன், முரளிதரன் என அனைவரும் பயத்தை கண்களில் உள்வாங்கி நடித்துளார்கள்.

படத்தின் முதல் பாதி மிக அதிக அளவில் பயமுறுத்தும் திரைக்கதை இரண்டாவது பாதியில் சாதாரண பேய் படம் போல சென்று முடிகிறது. முதல் பாதியில் கொண்டு வந்த பயத்தை இரண்டாவது பாதியிலும் தக்க வைத்திருந்தால் அஸ்வின்ஸ் ஒரு ஹாலிவுட் பட தரத்தில் இருந்திருக்கும். தொழில் நுட்பத்தில் காட்டிய அக்கறையை திரைக்கதையிலும் காட்டியிருந்தால் அஸ்வின்ஸ் இன்னமும் வேகமாக பாய்ந்த்தி ருப்பான். இறுதியாக ஒன்று, இருதய பலவீனம் உள்ளவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com