
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதில் கே.கே.நகரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி உள்பட சிலரை போலீசார் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு வசதி படைத்த வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்தது சினிமா பட இயக்குநரும் காமெடி பட நடிகருமான பாரதி கண்ணன் என்பது தெரியவந்தது. இதனால் கைது செய்யப்பட்ட பாரதி கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக சில மீடியாக்களில் செய்தி வர, நான் அவனில்லை என்று காணொளி ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் பாரதிகண்ணன்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛நான் அருவா வேலு, கண்ணத்தாள், திருநெல்வேலி, பண்ணாரி அம்மன், கரகாட்டக்காரி உள்ளிட்ட 10க்கும் அதிகமான இயக்கி உள்ளேன்.
பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் பாலியல் வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? என்று எனக்கு தெரியாது. ஆனால் சிலர் பெயரை தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் அந்த செய்திக்கு என் போட்டோவுடன் செய்தி பிரசுரம் செய்து உள்ளனர். நான் வேறு, அந்த பாரதி கண்ணன் வேறு. இவ்வாறு தவறான செய்தி என் படத்துடன் வெளியானதால் என் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
என் மீது இதுவரை எந்த அவதூறுகளும் வந்ததில்லை. அந்த வழக்கிற்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. செய்தியை தவறாக வெளியிட்டவர்களும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, நான் தான் கைதாகினேன் என மக்கள் நினைத்துவிட கூடாது’ என அந்த காணொளியில் விளக்கமளித்துள்ளார்.
1981-ம் ஆண்டு நெல்லை சுந்தர்ராஜனிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பாரதி கண்ணன், 1989-ம் ஆண்டு வெளியான
நெத்தியடி மற்றும் ஜடிக்கேத்த மூடி ஆகிய படங்களில் சில துணை வேடங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் ஷங்கரின் கீழ் தொடர்ச்சியான படங்களில் பயிற்சி பெற்ற இவர், குணா மற்றும் பாண்டியன் திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராகவும் பணியாற்றியுள்ளார்.
அருவா வேலு, திருநெல்வேலி, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, ஸ்ரீ பண்ணாரி அம்மன், வயசு பசங்க உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது எந்த படங்களையும் இயக்குவதைத் தவிர்த்து, திரைப்படங்கள் மற்றும் சன்டிவியில் ‘எதிர்நீச்சல்’, ‘மருமகளே வா’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.