ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸுக்கு வந்த பதில் நோட்டீஸ்!

A R rahman
A R rahman
Published on

ணமோசடி புகாரில் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், 15 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 30ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்த அச்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அரசு அனுமதி வழங்காததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இசை நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகையை ஏ.ஆர்.ரஹ்மான் திரும்ப வழங்கவில்லை என்று கூறி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு, மூன்றாவது நபரிடம் கொடுத்த பணத்தை ரஹ்மானிடம் கொடுத்ததாக மலிவான விளம்பரத்திற்கு பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்தது. மேலும், ரஹ்மானின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு மன்னிப்பு கேட்பதுடன் 10 கோடி ரூபாய் இழப்பீட்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தரவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது.

ரஹ்மானின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், தங்களை அவதூறாக பேசியதற்காக ரஹ்மான்தான் மன்னிப்பு கேட்கவேண்டும் என பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பதிலில் பழிவாங்கும் செயல் திட்டமும், தாம் தான் பெரியவர் என்ற எண்ணமும் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதேபோன்று, முதலில் முன் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டவர், தற்போது ஒப்பந்தமே இல்லை என முன்னுக்குப்பின் முரணாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதற்காக அடுத்த 15 நாட்களில் 15 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், நிகழ்ச்சிக்கு கொடுத்த முன்தொகையை வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com