உங்களுக்கு சினிமாவும் பிடிக்கும் வின்டேஜ் கார்களையும் மிகவும் ரசித்துக் கொண்டாடுவீர்கள் எனில் இந்த மியூசியம் உங்களுக்கானது. படத்தயாரிப்பில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகக் கோலோச்சி வந்த ஏ வி எம் நிறுவனத்தார் படைத்த பல்வேறு புதுமைகளில் இன்று இதுவும் ஒன்றாகி இருக்கிறது. சென்னை, வடபழனி ஏ வி எம் ஸ்டுடியோ வளாகத்தில் நேற்று “ ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியத்தின்” துவக்க விழா நிகழ்ந்தது. துவக்கி வைத்தவர் மாண்பு மிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த மியூசியத்தில் விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் வரிசையில் பாயும் புலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பயன்படுத்திய சுஸுகி RV 90 முதல் சகலகலா வல்லவன் படத்தில் கமல்ஹாஸன் பயன்படுத்திய பியூக் சூப்பர் 8 பைக் வரை இடம்பெற்றிருக்கிறது. இந்த மியூசியம் ஏ வி எம் வாரிசுகளில் ஒருவரான எம் எஸ் குகன் என்பவரது மூளையில் உதித்த புதுமைகளில் ஒன்று, அவருக்கு இயல்பிலேயே வ்டேஜ் வாகனங்களி ந்ன்ன் மீதான ஆர்வத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொள்பவராக இருந்தார். தனது ஆர்வத்தின் காரணமாக அவர் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டு பல்வேறு விதமான விண்டேஜ் கார்களை தங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் பயன்படுத்த ஒரு காரணமாக அமைந்தார். அதற்குப் பொருத்தமாக இந்த மியூசியத்தில் தற்போது இடம்பெற்றிருக்கும் அனைத்து விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகளுமே ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏவிஎம் திரைப்படங்களில் இடம்பெற்றவையாகத் தான் இருக்கின்றன.
அந்த வரிசையில் இந்த மியூசியத்தில் இடம்பெற்றுள்ள கார்களில் எம்ஜிஆர் பயன்படுத்திய டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஜெமினி மூவிஸ் எஸ் எஸ் வாசன் பயன்படுத்திய வாக்ஸ்ஹால் வேலாக்ஸ், ஏவிஎம் நிறுவனரும், எம் எஸ் குகனின் தாத்தாவுமான ஏ வி மெய்யப்பச் செட்டியார் முதன்முதலாக வாங்கிப் பயன்படுத்திய வாக்ஸ்ஹால் 14 ரக கார் மற்றும் அவர் பயன்படுத்திய பியூக் சூப்பர் 8 பைக்கும் கூட இடம்பெற்றிருக்கிறது.
தலைப்பில் குறிப்பிட்டபடி இந்த மியூசியமானது விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகளுக்கானது மட்டுமல்ல, பாரம்பரியமிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் 50 களில் தொடங்கி தங்களது படத்தயாரிப்பு விஷயங்களில் அன்றிலிருந்து இன்று வரை பயன்படுத்திய பல்வேறு விதமான சினிமா தொழில் நுட்ப உபகரணங்களையும், செயல்முறை விளக்க மாதிரிகளையும் இங்கு காட்சிப்படுத்தியுள்ளது. அந்தக் காலத்தில் பயன்படுத்திய டப்பிங் முறைகள், அதற்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள், பல்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்டுச்
சொல்வதென்றால் முரட்டுக்காளை, முந்தானை முடிச்சு காலக கட்டங்களில் ஏவிஎம் பயன்படுத்திய ஒளிப்பதிவுக் கருவிகள், சிங்கிள் டிராக், மல்ட்டி டிராக் ரெகார்டிங் கருவிகள், பின்னணி பாடகர்கள் பயன்படுத்திய பல்வேறு காலகட்டத்திய மைக்குகள், செயற்கை சூறைக்காற்று மற்றும் மழையை வருவிக்க அவர்கள் பயன்படுத்திய ஜெயண்ட் சைஸ் ஃபேன்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுமே இந்த ஹெரிடேஜ் மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த மியூசியம் பொதுமக்கள் பார்வைக்காக புதன்கிழமை முதல் திங்கள் கிழமை வரையிலும் திறக்கப்படவுள்ளது. பார்வையாளர் நேரமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என அறிவித்திருக்கிறார்கள். செவ்வாய் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர பிற அனைத்து நாட்களிலும் மியூசியம் திறந்திருக்கும் எனத் தகவல்.
குழந்தைகளுக்கான கட்டணம்: ரூ.150, பெரியவர்களுக்கு ரூ.200 கட்டணம் என அறிவித்திருக்கிறார்கள்.