அயலி வெப் தொடர் விமர்சனம்!

அயலி வெப் தொடர் விமர்சனம்!
Published on

'பெண்ணடிமை தனத்திற்கு எதிரான போர்க்கொடி' பெண்ணின் உடல் சார்ந்த பல்வேறு கற்பிதங்கள் நம் நாட்டில் உள்ளன. இதை மையமாக வைத்து அயலி என்ற வெப்தொடர் வெளியாகி உள்ளது. ஜீ ஒரிஜினல் தளம் இந்த தொடரை வெளியிட்டு உள்ளது. முத்து குமார் அயலி வெப் தொடரை இயக்கி உள்ளார். 1990 களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள  சில மூட பழக்க வழக்கங்களால், பெண்கள் வயதுக்கு வந்த பின்பு பள்ளிக்கு அனுப்பாமல் திருமணம் செய்து வைக்கிறார்கள் இதை உறுதியாக செய்வதாக தங்கள் குல தெய்வமான அயலி முன் சபதம் செய்கிறார்கள். அந்த ஊர் பள்ளியில் நன்றாக படிக்கும் சிறுமி தமிழ், டாக்டர் ஆகும் கனவுடன் இருக்கிறார். படிப்பை தொடர தான் வயதுக்கு வர கூடாது என்று அயலியிடம் வேண்டிக்கொள்கிறாள். இருப்பினும் பூப்பெய்தி விடுகிறாள். தான் வயதுக்கு வருவது தெரிந்தால் குடும்பமும் ஊரும் சேர்ந்து படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் தான் வயதுக்கு வந்ததை மறைத்து விடுகிறாள். தமிழின் அம்மா இதை கண்டுபிடித்து விடுகிறாள். தமிழின் மருத்துவ கனவு  நினைவானதா? அம்மா என்ன செய்தாள் என்பதை நகைச்சுவையாகவும், பெண்ணடிமை தனத்திற்கு எதிரான சவுக்கடியாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆண்களை விட அதிகம் போராடிதான் நம் சமூகத்தில் வெற்றி பெற வேண்டியுள்ளது. ஒரு பெண் தனது பெண்மையையே மறைத்து கல்வி கற்க நடத்தும் போராட்டம்தான் அயலி.

தமிழ் செல்வியாக அபி நட்சத்திரா வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சிறுமியாக துள்ளலும் எந்த கட்டுப்பாடும் தன்னை பாதிக்காது என்ற அலட்சியமும் கலந்த வித்தியாசமான நடிப்பை தந்துள்ளார். அம்மா அனு மோல் மகளின் ஆசையை நிறைவேற்ற முயற்சிப்பதும், கணவனை விட்டு தர முடியாமல் பரிதவிப்பதும் என அனுபவம் வாய்ந்த நடிப்பை தந்துள்ளார். அப்பாவாக வரும் அருவி மதன்  ஒரு  மகளின் மீது அன்பு வைத்துள்ள தந்தையை கட்சிதமாக காட்டியுள்ளார். "குனியாத, பேசாத, சிரிக்காதன்னு பெண்களுக்கு சொல்றவங்க இதுல ஒண்ணாவது பசங்களுக்கு சொல்றாங்களா, பொண்ணுகன்னா உடம்பை தாண்டி யோசிக்க மாட்டிங்களா போன்ற வசனங்கள் அற்புதம். ஆணாதிக்க சிந்தனை என்பதே பெண்கள் வழியாக தான் நிறைவேற்றப் படுகிறது என்பதை  அயலி நமக்கு புரிய வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com