இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி, அஸ்ரானி, யஷ்பால் சர்மா, அஞ்சு அஸ்ரானி, மாஸ்டர் அத்வைத், புகழ், பாண்டி ரவி, போஸ் வெங்கட், கல்லூரி வினோத் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'அயோத்தி' .
அயோத்தி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்று இருந்தது. மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் 'அயோத்தி' திரைப்படம் இன்று ஏப்ரல் 7 ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது
இன்றைய அவசர யுகத்தில் மனிதத்தின் மீது நம்பிக்கை குறைந்த காலகட்டத்தில் , மனிதத்தின் மற்றும் மனித நேயத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கையை விதைக்கும் கதை மற்றும் திரைக்கதையை படமாக்கியதற்காகவே இயக்குனர் மந்திரமூர்த்திக்கு ஒரு சபாஷ் ..!
அயோத்தியைச் சேர்ந்த பல்ராம், மனைவி ஜானகி , மகள் ஷிவானி மற்றும் மகன் சோனு ஆகியோருடன் புனித யாத்திரைக்காக, ராமேஸ்வரம் வருகிறார். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து டாக்ஸியில் ராமேஸ்வரம் செல்கிறார்கள். பல்ராமின் அவசரத்தால் மோசமான விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் படுகாயமடையும் அவரது மனைவி ஜானகி உயிரிழந்து விட, டாக்ஸி ஓட்டுநரின் நண்பர்களான அப்துல் மாலிக், பாண்டி இருவரும் மொழி தெரியாமல் தவிக்கும் அந்தக் குடும்பத்துக்கு உதவ தயாராகிறார்கள் மனிதாபிமானத்துடன் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பதை தான் மனதைப் பிழியும் நிகழ்வுகளோடு காட்சியாக தருகிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி.
அரசின் விதிமுறைகளும், அவசர காலங்களில் அவற்றைப் பின்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட எளிய மனிதர்களின் மன போராட்டங்கள் என யதார்த்தத்தினை உணர்த்தி செல்கிறது இந்த கனமான கதைக்களம்.
கதையின் நாயகன் சசிகுமார், அவர் நண்பராக "குக் வித் கோமாளி" புகழ் , இருவரும் கதாபாத்திரத்தின் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்த கணவனாக யஷ்பால் சர்மா சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தனின் 'காற்றோடு பட்டம்போலே' பாடல் நெஞ்சைக் கனமாக்குகிறது. டிரைடென்ட் ஆர்ட்ஸ் அயோத்தியின் தயாரிப்பு பேனராகவும், ஆர். ரவீந்திரன் தயாரிப்பாளராகவும் உள்ளனர். ஒளிப்பதிவு இயக்குனர் மாதேஷ் மாணிக்கம், எடிட்டர் சான் லோகேஷ்.
படத்தில் ஆங்காங்கே கிளிஷே காட்சிகளும் , மெலோ டிராமா சம்பவங்களும் சற்றே தவிர்த்திருக்கலாம் . சற்றே சுவாரஸ்யங்களையும் சேர்த்திருக்கலாம்.
படம் நெடுக மனிதத்தையும், மனித நேயத்தையும் அங்கங்கே தூவியிருப்பது வரவேற்கதக்கது. இத்திரைப்படம் திரையரங்கில் பெரும் வரவேற்பினை பெற்றது போலவே OTT ரசிகர்களிடையேயும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது ...!