பிற்போக்குத்தனமானது " பஹீரா"

திரை விமர்சனம்!
பிற்போக்குத்தனமானது " பஹீரா"
Published on

பிரபுதேவா வித்தியாசமான? கதாபாத்திரங்களில் நடிப்பதாக நினைத்து நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘பஹீரா’. இந்த திரைப்படத்தை படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் SUN NXT OTT யில் வெளியாகியிருக்கிறது.

அமீரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, ஜனனி, சாக்‌ஷி அகர்வால் எனப் பல கதாநாயகிகள் இருந்தாலும், அதில் அமீரா தஸ்தூருக்கு மட்டும் தான் கொஞ்சமே கொஞ்சூண்டு சொல்லும்படியான வேடம். அதற்கு அவரும் ஓரளவுக்கு நியாயம் செய்திருக்கிறார். இவர்கள் தவிர நாசர், சாய் குமார், ஸ்ரீகாந்த் ,கின்னஸ் பக்ரு என அனைத்து நல்ல நடிகர்களையும் வீணடித்திருக்கிறார்கள்.

ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. பிற க்ரைம் த்ரில்லர் படங்களை போன்றே, பல பெண்கள் தொடர்ந்து மிக கொடூரமாக கொலை செய்யப்படுகிறாரர்கள். அதன் மூல காரணங்களாக பெண்கள் ஆண்களை காதலித்து ஏமாற்றி வருவதாக சொல்கிறார்கள்.

பிரபு தேவா பல்வேறு மேக்கப்களில் வந்து விதவிதமான பெண்களை கேட்பாரற்று மிக கொடூரமா கொன்று போடுகிறார். கதை என்று புதுமையாக ஏதுமே இல்லை என்பதே புதுமை.

ஒவ்வொரு காட்சியிலும் பிரபு தேவா வருகிறார் பெண்களை நமக்கே சலிப்பு தட்டும் அளவிற்கு அசால்ட்டாக கொன்று போட்டுக்கொண்டே இருக்கிறார். இவ்வளவு சீரியசான மேட்டரை காபி குடிப்பது போல் மிக மெதுவாக எந்தவித பரபரப்பே இல்லாமல் டீல் செய்கிறார் போலீசாக வரும் சாய்குமார்.

படத்தில் திரும்ப திரும்ப வரும் காட்சியமைப்புகள் சலிப்பைத் தருகிறது. வசனங்களிலோ கடைந்தெடுக்கப்பட்ட பிற்போக்கு தனம் விரவிக் கிடக்கிறது. காட்டப்படும் பிளாஷ் பேக் கதையிலும் வலுவோ, புதுமையோ இல்லாமல் அதர பழசான அதே அரைத்த பழைய புளித்து போன மாவு.

சமூகத்தில் ஏற்கனவே பெண்கள் மட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதீத கவலை அளித்து வரும் நிலையில் கொஞ்சமும் சமூக பொறுப்பே இல்லாமல் கடைந்தெடுத்த பிற்போக்கு தனங்களை புகுத்தி கதை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

சீரியல் நடிகைகள் முதல் பிக் பாஸ் நடிகைகள் வரை நட்சத்திர பெண்கள் பட்டாளம் கொடூரமாய் கொல்லப்படுவதற்காகவே படத்தில் வந்து போகிறார்கள்.

கடைசியில் இவ்வளவு கொடூர கொலைகளை செய்த சைக்கோ பாத் பிரபுதேவாவை எந்த வித உறுத்தலுமில்லாமல் சைக்கோ டாக்டரான அமைரா கல்யாணம் செய்து ஒரு பையனை கூட பெற்றுக் கொள்கிறார். என்ன ஒரு பெருந்தன்மை...ஆனால் நமக்கு தான் சகிக்கவில்லை.

மொத்தத்தில் பெண்கள் காதலித்தால் , மறுத்தால், ஏமாற்றினால் ஈவு இரக்கமேயற்று கொன்று போடுங்கள் என்கிற பிற்போக்குத் தனத்தை படமாக அளித்திருக்கிறார் இயக்குனர் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com