

காசில்லை என்று தெரிந்ததும் காதலையே ஒதுக்கிவிட்டு போய்விடுகிறான் அந்த 'காதல் நாயகன்'. ஓடை நீரில் ஒய்யாரமாகப் பூத்திருந்த அந்த அல்லி மலர், வற்றிய ஓடையில் வாட ஆரம்பிக்கிறது. "கை பிடிப்பான், காப்பாற்றுவான், கனிவான காதலை தருவான், இறுதிவரை துணையிருந்து இப்பிறவியை ஈடேற்றுவான்" என்ற கனவெல்லாம் காற்றோடு போகிறது. ஆனாலும் அந்தக்கன்னி அயர்ந்து அமர்ந்துவிடவில்லை. ஒப்பாரி வைத்து, ஓலமிட்டு, ஊர் கூட்டி நியாயம் கேட்டு அவன் நிம்மதியைகுலைத்திட விரும்பவில்லை. விலக நினைப்பவனோடு விதண்டாவாதம் பேசி, வற்புறுத்தி கைப்பிடித்தால் வாழ்க்கை இனிக்காதே!
"Love is such a brittle fragile thing" என்று ஓர் ஆங்கில பாடல் உண்டு.அதாவது காதல் உணர்வு என்பது மென்மையான எளிதாக உடையக் கூடிய ஒரு பொருள் போன்றது என்பதே இதன் பொருள்!நான்கு கைகளும் இணைந்தால்தானே நல்வாழ்க்கை ஊர்ஜிதமாகும்!பை (Bye) சொல்வதற்கே இரண்டு கைகள் பழகிவிட்டால், பிரிந்து விடுவதல்லவா முறை!நாயகி நல்லவள்.நடைமுறை வாழ்க்கையை அறிந்தவள்.எடுத்துவிட்ட பிறவியை எப்படியாவது வாழ்ந்துதானே ஆக வேண்டும்? அவளும் வாழ்ந்து பார்த்துவிடுவது என்று முடிவெடுக்கிறாள்.
தான் காதலித்தவனை விட தன்னைக் காதலித்து,மரியாதை செலுத்துபவனே உயர்ந்தவனென்று முடிவெடுக்கிறாள் நாயகி.அவன் மதிப்பான பணியில் இல்லையென்றாலும்,கை நிறையச் சம்பாதிக்கவில்லையென்றாலும், நல்லவனாகவும், உண்மையானவனுமாகவும் இருந்தால் போதுமென்று எண்ணி,அவனையே திருமணமும் செய்து கொள்கிறாள்.நம்மூர்ப் பெண்களுக்கு உள்நாட்டு எதிரிகளே மாமியாரும்,நாத்தனாரும்தானே!நாயகி குடும்பமும் அதற்கு விதி விலக்கல்லவே! மாளிகையிலிருந்து மண்குடிசைக்கு வந்த பின்னாலும்,மனத்தைச் சூழ் நிலைக்கேற்ப மாற்றிக்கொண்ட பிறகும்,அவள் விதியோ என்னவோ அவளைத் துரத்தித் துரத்தி அடிக்கிறது!மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறாள் அவள்!
நாணயத்தின் இரு பக்கங்கள் போல,இரவும் பகலும் போல,இன்பமும் துன்பமும் போல,இந்தப் பாடலும் ஏற்றத்தையும்,ஏழ்மையையும் படம் பிடித்துக் காட்டுவதோடு,நாயகியின் குடும்பச் சூழலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே!
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே!இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே!”
உண்மைதானே!ஏழைகளின் வற்றாத செல்வம்,கண்ணீர்தானே!
“செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால்கஞ்சி…
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி!
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி!”
சோறில்லாத பானைகளும்,இன்பம் காணாத இதயங்களுந்தானே ஏழைகளின் அடையாளங்கள்!
“மாணிக்கத் தேர்போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்!
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்!”
உள்ளவர்களோடு உள்ளவர்கள் சேர்வதும்,இல்லாதவர்களோடு இல்லாதவர்கள்
கூடுவதுந்தானே உலக இயற்கை!
நாயகன் பணி புரியும் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் (ஸ்ட்ரைக்) ஏற்பட்டு, அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அல்லல் ஏற்படுகிறது.வீட்டில் இருந்தவன் வெளியே கிளம்ப,”இருட்டிடுச்சே!இப்ப எங்க வெளியே கிளம்பறீங்க?”என்ற நாயகியிடம்
“இருண்டுதான் போச்சு!” என்று சிம்பாலிக்காக சொல்லி சென்றவனை கொலை செய்து விடுகிறார்கள்,எதிர் குரூப்பை சேர்ந்தவர்கள்.இமாலய இழப்பு என்றாலும், மனதை இரும்பாக்கிக் கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறாள் நாயகி.
மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வீடுகளில் பாத்திரம் தேய்க்க ஆரம்பிக்கிறாள். எப்பொழுதாவது வரும் நிவாரணத் தொகையை வாங்க வரும் மாமியாரோ, அதைப் பெற்றுக்கொண்டு தன் மகள் வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள். குழந்தைகள் பசியால் வாடுகின்றன. ஒருநாள்,குழந்தைகள் மூவரும் சாலையோர டீக்கடையில்,பசி தாளாமல் அங்குள்ள வடையை எடுத்து விடுகிறார்கள்.பெரிய பெண்ணின் இடுப்பில் மூன்றாவது குழந்தை.
கையைப் பிடித்தபடி தம்பி!பையனும் பெண்ணும் வடைகளைக் கையில் வைத்திருக்க,இடுப்புக் குழந்தையோ ஒரு வாய் கடித்து மெல்லும்!இவர்கள் வடையை எடுத்ததை அறிந்த டீக்கடைக்காரர் கொதி எண்ணெயை அவர்கள் மேலே ஊற்ற,அழும் அந்தச் சிறு குழந்தையின் வாயிலிருந்து மெல்ல உதிரும் வடை!
இன்றைக்கும் வடையைப் பார்த்தாலே, அந்த அவலக் காட்சிதான் அடிமனத்தை அசைக்கிறது!வேலையிலிருந்து திரும்பும் அவளிடம் பக்கத்து வீட்டுக்காரர் விஷயத்தைச் சொல்ல,வேலியில் இருக்கும் விலாச்சினை உருவி விளாசி விடுவாள் மூத்தவளை!இரவில் தேம்பியபடி தூங்கும் அவள் உடல் காயத்தைப் பார்த்து உருகிக் கரைவாள்!மெல்ல மனது முடிவை நோக்கிப் போகும்!
சில நாட்களுக்குப் பிறகு,ஒரு வீட்டில் மீந்த உணவைக் குழந்தைகளுக்காக நாயகி எடுத்து வர,அதை வீட்டினுள்ளே வைத்து விட்டு,வெளியில் விளையாடச் சென்ற குழந்தைகளைக் கூப்பிட்டு வர,அதற்குள் ஒரு நாய் அதனைத் தள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.அந்த நாயை விரட்டி விட்டு,அது வாய் வைத்த மேல் சோற்றை அள்ளி விட்டு,தயாராக வைத்திருந்த விஷத்தைக் கலந்து மூவருக்கும் ஊட்டி விடுவாள்.அவளும் சாப்பிடுகிறாள்.
"கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு! கண்ணுறங்கு!"
அவள் துரதிருஷ்டம்!மூவரும் கண்ணுறங்கிப் போக…அவள் பிழைத்துக் கொள்வாள்!
குற்றவாளிக் கூண்டில் நிற்பாள்! அவள் தோழியே வக்கீலாக அவளுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கச் சொல்லி வாதாட,நாயகியும் தனக்குத் தூக்குத்தண்டனை தருமாறே வேண்டுவாள்.உண்மையில் குற்றவாளி அவளா? இல்லையே!
யதார்த்தமும்,உலக நடப்பும் கலந்த உன்னதத் திரைப்படம்தான் துலாபாரம்!
கோயில்களிலும்,பிற வழிபாட்டுத் தளங்களிலும் இருக்கும் தராசே துலாபாரம் என்று பெயர் பெறுகிறது.நேர்த்திக் கடனாக நேரும் பொருட்களை,நேர்ந்தவர்களின் எடைக்கு நிராக இறைவனுக்குக் காணிக்கையளிக்க இது பயன்படுகிறது.
1968-69ல் மலையாளத்திலும்,தமிழிலும் வெளிவந்த இந்தத் திரைப்படம் பல பரிசுகளை வென்றது.நடிகை சாரதாவை உச்சத்தில் ஏற்றி வைத்தது.’ஊர்வசி’ ஆக்கி விட்டது.சோகப் படங்கள் சுமாராகத்தான் ஓடும் என்ற வரையறையைச் சுக்கு நூறாக்கிப் போட்ட வெற்றிப் படம் இது.இயக்குனர் வின்சென்ட் வரலாற்றை மாற்றியெழுத வைத்தார்.
அந்தக் காலத்தில் ‘தி எக்சார்ஸிஸ்ட்’(The Exorcist)என்ற ஆங்கிலத் திகில் படத்தைத் தனியாக அமர்ந்து தியேட்டரில் பயமின்றிப் பார்த்தால் பரிசு, என்றெல்லாம் அறிவிப்புகள் அதிகம் வந்ததாகக் கூறுவார்கள்.அந்த விதத்தில், இந்தப் படத்தைக் கண்களில் நீர் வராமல் யாரும் பார்த்து விட்டால் பரிசு என்று கூட அறிவித்திருக்கலாம்.அந்த அளவுக்கு நடைமுறை துயரத்தையும்,சோகத்தையும் கண்முன்னால் கொண்டு வந்து,வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்த காவியம் இது!ஒளிரும் ஓவியமாய் உள்ளத்தில் தங்கி விட்ட பொக்கிஷம் இது!
பல படங்களை ரீ-ரிலீஸ் செய்வோர் இது போன்ற சிறப்பான படங்களை ரீ-ரிலீஸ் செய்து தற்கால இளைஞர்களும் பார்க்கும்படி செய்யலாமே!