இன்று தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அன்றிருந்த காமெடி நடிகர்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். அவ்வகையில் நடிகர் செந்தில் காமெடி நடிகராக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் யார் தெரியுமா? வாங்க இப்போதே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு இணையாக போற்றப்படுவர்கள் காமெடி நடிகர்கள். அன்றைய காலங்களில் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னால், பல நடிகர்கள் நாடகங்களில் நடித்து வந்தனர். அப்படி நாடக நடிகராக இருந்து திரைப்படத்தில் காமெடி நடிகராக கலக்கியவர் தான் செந்தில். ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி - செந்தில் காம்போ இல்லாமல் திரைப்படங்கள் வருவது அரிது தான். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் இடையிலான காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவர்களுக்குப் பிறகு விவேக், வடிவேலு, சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு என பல காமெடி நடிகர்கள் உருவெடுத்து, தங்களுக்கான இடத்தைப் பிடித்தனர். இருப்பினும் இன்றும் கூட கவுண்டமணி - செந்தில் காமெடிக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.
காமெடியில் கலக்கிய செந்திலுக்கு கூட சில காலங்களுக்கு திரைப்பட வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. திரைப்படத்திற்கு வருவதற்கு முன்னர் பல நாடகங்களில் நடித்துள்ளார் செந்தில். அப்போது சக நாடக நடிகர்கள் இவரை உருவ கேலி செய்தனர். செந்தில் பார்ப்பதற்கு குள்ளமாக, கொஞ்சம் குண்டாக இருந்ததால் அடிக்கடி இவரை கேலி செய்வதை பலரும் வாடிக்கையாக்கிக் கொண்டனர். இதுதவிர இவரை டீ வாங்கிட்டு வா என வேலையும் செய்ய சொல்வார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் செந்திலுக்கு, பட வாய்ப்பைக் கொடுத்தவர் தான் இயக்குநர் பாக்யராஜ்.
சக நடிகர்களால் கேலிக்கு உள்ளான் செந்திலைப் பார்த்து மனம் வருந்தினார் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். இவரும் அப்போது திரைப்பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கெண்டிருந்தவர் தான். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, நிச்சயமாக செந்திலுக்கு எனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பேன் என்று அப்போதே சொல்லியிருந்தார். அதற்கேற்ப திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த போது, செந்திலுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார் பாக்யராஜ்.
பாக்யராஜ் இயக்கிய மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா மற்றும் துறல் நின்னு போச்சு போன்ற படங்களில் செந்திலுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். திரைப்படங்களில் நடித்ததால் செந்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் எனவும் பாக்யராஜ் தெரிவித்து இருக்கிறார். பாக்யராஜ் கொடுத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட செந்தில், பல படங்களில் தனது காமெடியான நடிப்பை வெளிப்படுத்தி இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் காமெடி காட்சிகள் என்றும் அழியா பொக்கிஷங்களே!
இன்று எப்போதாவது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு திரையில் தோன்றுகிறார் செந்தில். இவரது இடத்தை நிரப்ப பல நடிகர்கள் வந்தாலும், செந்தில் தனக்கென ஒரு அத்தியாயத்தையே நிலைநிறுத்தி சென்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.