தமிழ் சினிமாவின் ஆலமரம் சாய்ந்தது: 16 வயதினிலே முதல் கருத்தம்மா வரை பாரதிராஜா ஒரு சகாப்தம்!

Bharathiraja and assistants
Director BharathiRaja image credit:various
Updated on

இன்று (ஜூன்10) ,தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா(84) உடல் நலக் குறைவு காரணமாக மறைந்தார். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவினால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஆயினும் ,அவர் வீட்டில் இருந்தவாறு மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

தமிழ் சினிமாவின் மாபெரும் சகாப்தம்:

பாரதிராஜா ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே புரட்டி போட்டவர் என்றால் மிகையல்ல. 1941 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி, தேனி மாவட்டம் அல்லி நகரத்தில், பெரிய மாயத்தேவர் மற்றும் கருத்தம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர். சிறுவயதிலேயே சினிமாவின் மீதுள்ள பற்றினால் உள்ளூர் நாடகங்களில் இளையராஜாவுடன் இணைந்து கலந்து கொண்டார்.

பின்னர், சென்னையில் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருடன் இணைந்து ஒரே அறையில் தங்கி , தமிழ் சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பு தேடி அலைந்தார். அதற்கு பலன் இல்லாததால், கதாநாயகன் ஆசையை மறந்து புட்டண்ணா கனகலின்  உதவியாளராக சேர்ந்தார். அதை தொடர்ந்து கிருஷ்ணன் நாயர், அவிநாசி மணி, ஜெகநாதன், புல்லையா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

இளையராஜா, கங்கை அமரன், எஸ்பிபி.பாலசுப்ரமணியம் ஆகியோரெல்லாம் தமிழ் திரையில் நுழையும் முன்னரே பாரதிராஜாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக பாரதிராஜா அறிமுகமானார்.

தமிழ் சினிமா நீண்ட காலம் ஸ்டுடியோவில் மட்டுமே திரைப்படம் எடுக்க வேண்டும் என்று இருந்த மனநிலையை முற்றிலுமாக உடைத்து, அவுட்டோர் பக்கம் செல்ல பாரதிராஜா மிக முக்கிய காரணம் என்றால் மிகையல்ல. பாரதிராஜாவின் படங்கள் பெரும்பாலும் ஸ்டுடியோவிற்கு வெளியே படமாக்கப்பட்டன. அதிலும் மிக முக்கியமாக இந்திய சினிமாவில் கிராமப்புற வாழ்வியலை , திரையில் கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவையே சாரும்.

தன் முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி போன்ற நடிகர்களின் திறமையை வெளிக்கொணர்ந்தவர். 16 வயதினிலே திரைப்படத்தைத் தொடர்ந்து , கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் , நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை வரை பாரதிராஜா எடுத்த படங்கள் தொடர் வெற்றியை பெற்றன.

முதல் மரியாதை, ஒரு கைதியின் டைரி, கடலோர கவிதைகள், மண்வாசனை , வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே போன்ற திரைப்படங்கள் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்து அழுத்தமான கதைக்காக பெரிதும் பேசப்பட்டன. சிவாஜி கணேசனை வைத்து இவர் இயக்கிய 'முதல் மரியாதை' திரைப்படம் இன்றளவும் மிகச் சிறந்த திரைப்படத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

பாரதிராஜாவின் திரைப்படங்கள் கிராம மக்களின் வாழ்வியல், சமூகப் புரட்சி, பெண் விடுதலை, பெண் சிசுக்கொலை எதிர்த்தல் , சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான மனநிலை, சமூக மாற்றம் , புரட்சி ஆகியவற்றை தமிழ் சினிமாவில் அழுத்தமான பேசுகின்றன. பாரதிராஜா எப்போதும் பெரிய நடிகர்களை நம்பாமல், தன் கதைகளை மட்டும் நம்பி ஏராளமான புது முகங்களை திரையில் அறிமுகப்படுத்தியவர்.

பாக்கியராஜ் , கார்த்திக் , ராதா , பாண்டியன் , ரேவதி ,ரேகா , ராஜா , நெப்போலியன் , மணிவண்ணன் போன்றவர்களை நடிகர்களாக அறிமுகப்படுத்தினார். தமிழ் சினிமாவில் இளையராஜா இசையமைத்தால்தான் தயாரிப்பாளர்கள் படத்தினை வாங்குவார்கள், என்று நிலை இருந்த போதும் வேறு சில இசையமைப்பாளர்கள் உடன் துணிச்சலாக பணியாற்றி வெற்றியை தந்தவர். ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகமானபோது அவரை கிராமத்து இசைக்கு மாற்றி, அவரது இன்னொரு பரிணாமத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர்.

தமிழ் திரையுலகை பொருத்தவரையில் பாரதிராஜா ஒரு பெரிய ஆலமரம். பாரதி ராஜாவின் உதவி இயக்குனர்கள், அவர்களுடைய உதவி இயக்குனர்கள் என்று ஒவ்வொரு தலைமுறையிலும், அவரது பாரம்பரியம் தொடர்கிறது. பாக்கியராஜ் , மணிவண்ணன் , சீமான் , மனோபாலா , சித்ரா லட்சுமண ஆகியோர் அவரது நேரடி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளனர். பாரதிராஜாவின் வாரிசுரிமை பாக்யராஜ் வழியே பாண்டியராஜன், பார்த்திபன் , விக்ரமன் , கே.எஸ்.ரவிக்குமார் , சேரன் , பாண்டிராஜ் என இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது.

பாரதிராஜா மறைந்தாலும் அவர் விதைத்த விதைகள் தமிழ் சினிமாவில் விருட்சமாக வளர்ந்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com