பிரியங்கா சோப்ராவின் உறவினரும், பிரபல பாலிவுட் நடிகையுமான பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவை கரம்பிடித்தார்.
நீண்ட காலமாக காதலித்து வந்த இருவருக்கும், கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குளத்தின் நடுவே உள்ள பிரமாண்ட நட்சத்திர விடுதியில் திருமண விழா நடைபெற்றது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட படகில் வந்த மணமகன் ராகவ் சதாவை பரினீதி சோப்ராவின் குடும்பத்தினர் வரவேற்றனர்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின் கைவண்ணத்தில், மணமக்கள் இருவரும் கண்கவர் உடைகளில் தோற்றமளித்தனர். உறவினர்கள், நண்பர்கள் என முக்கியமான நபர்கள் சூழ திருமணம் அரங்கேறியது. இந்த விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரியங்கா சோப்ரா பங்கேற்க முடியாத சூழலில், அவரது தாயார் மது சோப்ரா மட்டும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிலையில் திருமண விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த பரினீதி சோப்ரா, காலை உணவு மேசையில் நடக்கும் முதல் அரட்டையில் இருந்து இந்த நாளுக்காக நீண்ட நாட்களாகவே காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். மேலும், இருவராலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து பிரிக்க முடியாது அதனால் இன்று முதல் வாழ்க்கையை தொடங்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.