பாலிவுட் நியூஸ்!

பாலிவுட் நியூஸ்!

பாலிவுட் சினிமா ஒரு ரவுண்ட் அப்!

“பெற்றோரை கவனித்துக்கொள்வது எனது பாக்கியம்!”

- அபிஷேக் பச்சன்

பிரபல இயக்குனர் பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் ரிலீசான படம் ‘கூமர்!’. ஒரு கையை இழந்த நிலையில், தனது கடுமையான முயற்சியால் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கும் ஒரு பெண்ணின் கதை இந்தப் படம்.

கிரிக்கெட் பயிற்சியாளராக அபிஷேக் பச்சன், கிரிக்கெட் டீம் உரிமையாளராக அமிதாப் பச்சன் நடித்துள்ளனர். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனிடம், “இந்திய இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வாழும் பொதுவான நடைமுறை” குறித்து கேள்வி கேட்கையில், அவர் கூறியதாவது:

“இன்றைய பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் மும்பை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்குப் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்துடன் செலவிட குறைவான நேரமே கிடைக்கிறது. என் தந்தை அமிதாப்பச்சனுக்கு 81 வயதும், தாயார் ஜெயா பச்சனுக்கு 75 வயதும் ஆகின்றன. அவர்களைப் பிரிந்து வாழ்வதைப் பற்றி என்னால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. அவர்களுடன் இருந்து, நன்றாக கவனித்துகொள்வது எனது பாக்கியம். கடவுளின் அருளால் தந்தையும், தாயும் சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்கின்றனர்.

நம்மை வளர்த்து ஆளாக்கி கவனித்துக்கொண்டவர்களை, நாமும் நன்கு கவனித்துக்கொள்வது மிக அவசியம்.  இந்திய கலாசாரத்தின் அம்சம் கூட்டுக் குடும்பமாகும். என்னுடைய 47 வயதிலும், பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசி, ஒருவேளை உணவு அருந்துவதை பெரிதும் விரும்புகிறேன்.”

அப்பாவின் ஆசைக்கு ‘நோ’ கூறிய மகன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்து, ‘ஸ்டார்டம்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் கெளரவ வேடத்தில் நடிக்க விரும்புவதாக ஷாருக்கான் தெரிவிக்கையில்,  ஆர்யன் கான் அதை நிராகரித்துவிட்டார்.

தான் இயக்கும் முதல் சீரிஸில் தந்தை நடித்தால், அது தனிப்பட்ட கவனத்தை மக்களிடையே ஏற்படுத்து மென்றெண்ணி அவரை நடிக்க வேண்டாமென கூறிவிட்டார் என்றும், மகனின் வெப்சீரிஸில் தான் நடித்தால், அது அதிக அளவில் பேசப்படும் என ஷாருக்கான விரும்புகிறார் என்றும் அநேகர் பேசுகின்றனர்.

வெப் சீரிஸ் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதை தங்களின் தளத்தில் வெளியிட பிரபல OTT நிறுவனம் ` 120 கோடி கொடுத்து வாங்கத் தயாராக உள்ளதெனக் கூறப்படுகிறது. ஆனால், வெப்சீரிஸ் தயாரித்து, எடிட்டிங் செய்து முடிக்கப்படும் வரை அதை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று ஆர்யன் கான் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். அதற்குள் வெப் சீரிஸின் 2,3,4,5 பகுதியைத் தயாரிக்க, பல தயாரிப்பாளர்கள் போட்டிப் போட்டுகொண்டு ஆர்யன் கானைத் தொடர்புகொள்ள ஆரம்பித்துள்ளனராம்!

அட்ரா சக்கை!

ஆச்சரியமான சந்திப்பு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவை, மற்றொரு சூப்பர் ஸ்டார் அமீர்கான் சந்தித்து பேசியது சினிமா வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மேந்திராவுடன் அதிகமாக ஒட்டாமல் இருக்கும் அமீர்கான், தனது மகன் அசாத்துடன் அவர் வீடு சென்றது சன்னி தியோலுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகத்தான். சன்னி தியோல் நடித்துள்ள Gadaar – 2 படம், 5 நாட்களில் ` 260 கோடியை எட்டியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

சன்னி தியோல் ஊரில் இல்லாத காரணம் தர்மேந்திரா மற்றும் இளைய மகனும் நடிகருமான பாபி தியோலை சந்தித்துப் பேசியுள்ளார் அமீர்கான்.  தர்மேந்திரா குடும்பத்தினர் விரும்பி அருந்தும் மாம்பழ லஸ்ஸியை அமீர்கானுக்கு குடிப்பதற்கு கொடுத்துள்ளனர்.

“இவர்களைப் பார்த்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. ‘யாதோன் கி பாரத்’ படத்தில் நானும் சிறுவனாக நடித்திருந்தது எல்லாம் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது” என அமீர்கான் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com