பொம்மை - விமர்சனம்!

பொம்மை - விமர்சனம்!

உயிரோட்டம் குறைவு :

ராதா மோகன் இயக்கத்தில் SJ சூர்யா, பிரியா பவானி  சங்கர் நடித்து வெளிவந்துள்ள  படம் பொம்மை. ஒரு பொம்மை  தயாரிக்கும் கம்பெனியில் பொம்மைகளுக்கு கண், உதடு, மூக்கு போன்ற வடிவங்களை வரைபவர் ராஜ்குமார். அந்த கம்பெனியில் உள்ள ஒரு பொம்மை சிறு வயதில் காணாமல்போன தனது தோழி நந்தினியை (பிரியா பவானி சங்கர்) போல இருப்பதாக கற்பனை செய்து அந்த பொம்மையுடன் பேசுகிறார். காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். ராஜ்குமார் இல்லாத நாளில் கம்பெனியின் மேனேஜர் இந்த பொம்மையை ஜவுளிக்கடைக்கு விற்று விடுகிறார். இதனால் கோபம் கொள்ளும் ராஜ்குமார் மேனேஜரை கொன்று விடுகிறார். ஒரு பிரபல கடையில் பொம்மை இருப்பதை கண்டுபிடித்து அக்கடையில் வேலைக்கு சேர்கிறார். அங்கயேயும் கற்பனையாக காதல் செய்கிறார். போலீஸ் கொலையை விசாரணை செய்கிறது. இது போல ஹாலிவுட்டிலும், இந்தியாவிலும் பல சைக்கோ படங்கள் வந்துள்ளன. நன்றாக ஆரம்பித்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் வலு இல்லாததால் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. ஒரே மாதிரியான காட்சிகள் மறுபடியும் மறுபடியும் வந்து அயற்சியை ஏற்படுத்துகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கம்பெனி மற்றும் கடை என இரண்டு இடங்களில் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன. ராதா மோகன் படங்களில் இருக்கும் யதார்த்தமான காமெடி காட்சிகள் பொம்மையில் மிஸ்ஸிங்.

யுவனின் இசை கேட்கலாம் ரகம். விக்ரம், தனுஷிற்கு பிறகு சிறந்த நடிகர் வரிசையில் வருகிறார் SJ சூர்யா. கிளைமாக்ஸ் காட்சியில் வித்தியாசமான நடிப்பை தந்துள்ளார். பிரியா பவானி சங்கர் ஒரு அழகு பொம்மையாக நடித்தும் வாழ்ந்தும் உள்ளார். சைக்கோ, காதல் என இரண்டு விஷயங்களை படம் சொன்னாலும் இரண்டையும் முழுமையாகவும், சரியாகவும் சொல்லாததால் நம்மை ஈர்க்காமல் செல்கிறது பொம்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com