Interview: 'சிவாஜி' முதல் 'இந்தியன் 2' வரை: ஷங்கர் படங்களில் காந்தி கிருஷ்ணாவின் ரகசிய பங்களிப்பு - அதிரடி நேர்காணல்!

Director Gandhi Krishna - Breakfast
Director Gandhi Krishna - Breakfast
Updated on

கடந்த 2003 ஆம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் படத்தின் இயக்குனர் Ar.காந்தி கிருஷ்ணா. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் கதையை மையப்படுத்தி ஆனந்த தாண்டவம் படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது 'பிரேக் பாஸ்ட்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் இன்னும் ஒரு சில நாளில் திரைக்கு வர உள்ளது. Ar. காந்தி கிருஷ்ணா நமது கல்கி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் இங்கே...

Q

நீண்ட இடைவெளிக்கு பின்பு கம் பேக் தந்துள்ளீர்கள் என்று சொல்லலாமா?

A

கம் பேக் என்று சொல்ல முடியாது. நான் சினிமாவில் தான் இயங்கி கொண்டிருக்கிறேன். பல படங்களில் குறிப்பாக என் குருநாதர் ஷங்கர் சார் இயக்கிய படங்களில் ஸ்கிரிப்ட ஒர்க்கில் வேலை கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 படத்திலும் நான் ஸ்கிரிப்ட் பணியை மேற்கொண்டேன்.

Breakfast Movie
Breakfast Movie
Q

இந்த படம் இயக்க இன்ஸ்பிரேஷனாக அமைந்த விஷயம் உள்ளதா?

A

நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு இளம் தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லை. ஒரு நாள் இந்த பெண் தான் கருவுற்றிருபதாக உணர்ந்து, தன் கணவருடன் மருத்துவமனைக்கு சென்றார். செல்லும் வழியில் ஒரு மாநகராட்சி பள்ளி ஒன்று இருந்திருக்கிறது. "இந்த பள்ளியில்தான் நம் குழந்தையை சேர்க்க வேண்டும்" என்று கணவர் சொல்லி இருக்கிறார். "நம் குழந்தையை அரசு பள்ளியில் சேர்ப்பதா" என்று மனைவி கேள்வி கேட்க, ஏன் நான் கவர்மெண்ட் ஸ்கூல்ல தான படிச்சேன் என்று கணவர் பதில் தர ஈகோ கலந்த விவாதமாக இந்த உரையாடல் மாறி இருக்கிறது. மருத்துவமனையில் மனைவியை பரிசோதித்த மருத்துவர் இது கர்ப்பம் இல்லை என்று சொல்லி விட்டார். இந்த ஏமாற்றமும், விவாதத்தால் எழுந்த கோபமும், மன உளைச்சலை ஏற்படுத்தி விவாகரத்து வரை சென்றிருக்கிறார்கள். எந்த பெரிய காரணங்களும் இல்லாமல் இப்படி ஈகோவால் விவாகரத்து பெற்ற இந்த தம்பதி தான் பிரேக் பாஸ்ட் படம் எடுக்க இன்ஸ்பிரேஷன்.

Q

வைரமுத்து இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம்?

A

நான் ஜென்டில் மேன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியது முதல் வைரமுத்துவுடன் பழகி வருகிறேன். பிரேக் பாஸ்ட் படத்தின் கதையை வைரமுத்து அவர்களிடம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கூறினேன். அவருக்கு கதை பிடித்து போனதால் பட்டு வேஷ்டி பரிசளித்தார். ஒவ்வொரு பாடலும் நன்றாக வர வேண்டும், என்னை திருப்தி படுத்த வேண்டும் என மெனக்கெடல் இருந்தது. வைரமுத்து அவர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.

Q

புது முகம் ஹீரோ ராணவ் தேர்ந்தெடுத்தது ஏன்?

A

இந்த கதையை பெரிய ஹீரோக்கள் ஏற்று கொண்டு நடிப்பது கடினம். புது முகமாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என யோசித்தேன். பிக் பாஸ் மூலமாக ஏற்கனவே பிரபலம் ஆன ராணவ் இந்த கதைக்கு சரியாக இருப்பார் என மனதுக்கு பட்டது. உடனே ராணவ்வை ஹீரோவாக்கி விட்டேன்.

Q

நீங்கள் அறிமுகம் செய்த விஷால், பரத் போன்றவர்கள் பெரிய ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். இந்த வரிசையில் ராணவ் இடம் பிடிப்பாரா?

A

கண்டிப்பாக இடம் பிடிப்பார். படம் பார்த்த பின்பு இந்த கேள்வியே உங்களுக்கு வராது.

Q

ஹீரோயினை எங்கே கண்டுபிடித்தீர்கள்?

A

எல்லாம் மலையாள தேசத்தில் தான். ஹீரோயின் ரோஸ்மின் மலையாளத்தில் சில படங்கள் செய்திருக்கிறார். மிஸ் கேரளா போட்டியில் பங்கு பெற்றவர். அழகும், நடிக்கவும் தெரிந்த ஒரு ஹீரோயினை தேடி கொண்டிருந்தேன். ரோஸ்மின் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. படம் பார்த்த பின்பு உங்களுக்கும் இது தோன்றும்.

Q

நீங்கள் ஷங்கரின் முதல் படம் முதல் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளீர்கள், ஷங்கர் தன்னிடம் பணியாற்றிய வசந்தபாலன் போன்றவர்களை வைத்து படம் தயாரித்து உள்ளார். உங்களை வைத்து ஷங்கர் ஏன் படம் தயாரிக்க வில்லை?

A

வசந்த பாலன் வெயில் கதையை சொன்னது என்னிடம்தான். நான்தான் ஷங்கரிடம் வெயில் கதையை சொல்ல சொன்னேன். எனக்கும் ஷங்கர்க்கும் இருப்பது டைரக்டர் - தயாரிப்பாளர் உறவு மட்டுமல்ல. இதையும் தாண்டி எங்களுக்குள் வார்த்தைகளில் சொல்ல முடியாத நட்பும், அன்பும் உள்ளது. அதனால் தான் செல்லமே என்ற வெற்றி படம் தந்த பின்பும் தனியாக படம் இயக்காமல் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி - தி பாஸ் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினேன். ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள அனைத்து படங்களிலும் என் பங்களிப்பு இருப்பதால் ஷங்கர் என் படத்தை தயாரிக்கவில்லை. இந்த கேள்வியே தேவை இல்லாதது.

Q

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதையை வைத்து ஆனந்த தாண்டவம் படம் இயக்கினீர்கள். சுஜாதா என்றதும் உங்களுக்கு நினைவில் வருவது என்ன?

A

சுஜாதா தந்த நம்பிக்கை தான் என் நினைவில் வருகிறது. 1997 நான் இயக்குவதாய் திட்டமிட்ட என்ஜினீயர் என்ற படம் பாதியில் நின்று போய்விட்டது. இதனால் படங்கள் கிடைக்காமல் போராட்டமாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சுஜாதா அவர்களை சந்தித்தேன். "எதுவும் செய்யாமல் துருப்பிடித்து தேய்ந்து போய் விடாதே, உழைத்து தேய்ந்து, முயற்சி செய்" என்றார்.

கதை கூட யோசிக்க முடியாமல் போராட்டமாக வாழ்க்கை செல்கிறது என்று சொன்னேன். உடனே அவர் எழுதிய 'அன்று உன் அருகில்' என்ற கதையை நான் இயக்க எனக்கு தந்தார். இந்த கதையை சுஜாதா அவர்கள் ரயில் பயணத்தின் போது ஒரு நாள் இரவில் எழுதி இருக்கிறார். இந்த கதையை நிலா காலம் என்ற பெயரில் இயக்கினேன். 2001 ஆம் ஆண்டு வெளியான இப்படம் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படம் தந்த பெயர்தான் எனக்கு செல்லமே படம் இயக்க வாய்ப்பை பெற்று தந்தது. சுஜாதா அவர்களின் சில கதைகளை படமாக இயக்க ஐடியா வைத்துள்ளேன். கூடிய விரைவில் அறிவிப்பேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com