கர்நாடக சங்கீத கலைஞர்; திரைவானிலும் தனக்கென தனியிடத்தைப் பெற்றவர்; கணீர்க் குரலாலேயே அனைவரையும் கவர்ந்தவர்; சீர்காழி என்ற ஊர் பெயரில் ஓர் உத்தமக் கலைஞர்! யார் இவர்?

Sirkazhi Govindarajan
Sirkazhi Govindarajan
Published on

சீர்காழி என்ற ஊர், ஓர் ஆன்மீகத் திருத்தலம்! கி.பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தருக்கு அவரின் மூன்று வயதிலேயே சிவனும் பார்வதியும் காட்சி தந்தனர்! அப்பா தனியாக அமர வைத்து விட்டு நீராடச் சென்றதால் அழுத அவருக்கு தேவியே ஞானப்பாலூட்ட, குளித்து வந்த தந்தை வாயில் பாலைப் பார்த்து சந்தேகப்பட, அந்த வயதிலேயே ‘தோடுடைய செவியன்’ என்ற தேவாரப் பாடலைப் பாடி அசத்தியதாக வரலாறு! அப்பொழுதிலிருந்தே செய்யுளுக்கும் இசைக்கும் சிறப்பு கூடி விட்டது அவ்வூரில்! மூன்று வயதில் பாட ஆரம்பித்த ஆளுடைய பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சம்பந்தர், தன் 16 வயதிலேயே இறந்த கொடுமையை வரலாறு நமக்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறது!     

எஸ்.கோவிந்தராஜன் அந்த ஊரில் பிறந்ததாலேயே சீர்காழி என்றாலே அவர்தான் என்ற அடையாளத்தைப் பெற்று விட்டார்! கர்நாடக சங்கீதம் மூலம் புகழ் பெற்று, திரைவானிலும் அவர் விடிவெள்ளியாக விளங்கி, தனக்கென ஓர் தனியிடத்தைப் பெற்றுள்ளார் ! பாடகராக, திரை நடிகராக இலங்கினாலும், தன் கணீர்க் குரலாலேயே அனைவரையும் கவர்ந்தவர் என்பது கண்கூடு!   

கதை, வசனம், இசை என்ற முக்கூடலின் பரிணாமத்தில் திரைப்படங்கள் தோன்றினாலும், காலப்போக்கில் கதையும், வசனமும் தேய்ந்துபோக, இசை மட்டும் எக்காலத்திலும் கோலோச்சி இன்பம் தருகிறது! அதிலும் பாடல் வரிகள் சிலரின் கணீர்க் குரலுடன் இணையும்போது, காலங்கடந்தும் நிலைத்து நிற்கும் கற்பகத் தருவாக, அவை நின்று நிலைத்து விடுகின்றன! கேட்பவர்களின் உள்ளங்களில் இன்பத்தையும் எழுச்சியையும் கூட்டி, எங்கோ அழைத்துச் சென்று விடுகின்றன!     

எந்தக் கலைஞனின் பணியும் மக்களின் வாழ்வோடு ஒட்டிச் சென்றால், அது உன்னதமாகி உயர்வடைந்து விடுகிறது! அதனாலேயே அந்தக் கலைஞன் இருந்தாலும் இறந்தாலும், இறவாப் புகழை எய்தி விடுகிறான்! அவ்வாறு புகழ் எய்திய பலருள், முன்னணி வரிசையில் வீற்றிருப்பவர் சீர்காழி டாக்டர் எஸ்.கோவிந்தராஜன் அவர்கள்! பூதவுடலுடன் இவ்வுலகில் வாழ்ந்தது என்னவோ 55 ஆண்டுகள்தான் என்றாலும் அவர் புகழுடம்புக்கு என்றுமே அழிவில்லை!

அமுதும் தேனும் எதற்கு நீஅருகினில் இருக்கையிலே எனக்கு! காதலின் மகிமையை, காதலியின் மகத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் இவ்வரிகளும், சீர்காழியின் குரலும் மறக்கவே முடியாதவை! கேட்கும் போதெல்லாம் மகிழ்வை மட்டுமே தருபவை!

ஒற்றுமையாய் வாழ்வதினாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே! மனித இனம் உள்ளவரை பின்பற்றப்பட வேண்டிய அருமையான வரிகள்! விளக்கமே தேவைப்படாத வேத வார்த்தைகள்!

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்… கேட்கும்போதே ஒரு நேசக்கோடு நெஞ்சிடையே ஓடுகிறதல்லவா?

இதையும் படியுங்கள்:
நெட்ஃபிளிக்ஸ் வெளியிடும் 'Nayanthara: Beyond the Fairy Tale'!
Sirkazhi Govindarajan

கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா! மாடப்புறா ஆலமரத்தில் கூடு கட்டுமா? அப்படி ஒரு கட்டாயம் ஏற்படுகிறது அந்த மாடப் புறாவிற்கு!

சீர்காழி என்றதும் திடீரென எல்லொருக்கும் நினைவுக்கு வரும் பாடல்கள் இரண்டு உண்டு! அதனைச் சொல்லாமல் விட்டால் கட்டுரை நிறைவு பெறாது;நம் மனதும் அமைதியுறாது!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா - கர்ணாவருவதை எதிர் கொள்ளடா! இந்த ஒற்றைப்பாடலில் மாவீரன் கர்ணனின் வாழ்க்கையையே படம் பிடித்துக் காட்டி விடுவார் கவிஞர்! அதற்கு மேலும் மெருகு கொடுத்திருப்பார் சீர்காழி!   

இப்படிஇன்னும் எத்தனையோ பாடல்களை நாம் எடுத்துச் சொல்லிக் கொண்டே போக முடியும்! இந்த ஒரு பாடலுடன் நாம் நிறைவு செய்வோம்! ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா! எவ்வளவு அர்த்தமுள்ள பாடல்!

இந்தப் பாடல்களையெல்லாம் சீர்காழி குரலில்,கண்ணை மூடிக்கொண்டு கேட்கையில், மூடிய கண்களுக்குள் காட்சிகள் விரிவதை நம்மால் தடுக்க முடியாதுதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com