ஹன்சிகா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் அளித்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. இவர் மாப்பிள்ளை என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வரிசையாக பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் குஷ்பு போலவே இருப்பதால், இவரை சின்ன குஷ்பு என்றெல்லாம் ஒரு காலத்தில் அழைத்தார்கள். ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்ட இவர், பின்னர் நடிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.
இப்படியான நிலையில், இவர் மீதும் இவரின் குடும்பத்தினர் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
இவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், சின்னத்திரை நடிகையான முஸ்கன் நான்சிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஹன்சிகா குடும்பத்தினர் மீது அவரது அண்ணி புகார் அளித்திருக்கிறார். “ ஹன்சிகா மோத்வானியும், அவரது தாயார் மோனோ மோத்வானியும், என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு, எனக்கும், எனது கணவருக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தினர். எனது கணவர், அவரது தாயார் மற்றும் சகோதரி ஹன்சிகா மூவரும் குடும்ப வன்முறையில் ஈடுப்பட்டனர்.
அவர்களால் தாக்குதலுக்கு உள்ளான நான், ‘பெல்ஸ் பால்சி’ (முகத்தின் ஒருபகுதி தசைகளின் செயலிழப்பு) நோயால் பாதிக்கப்பட்டேன். மூன்று பேரும் என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள்” என்று புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 498-A, 323, 504, 506, 34 ஆகியவற்றின் கீழ் நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஹன்சிகா மோத்வானி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். சினிமா ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.