1948ம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளியான சந்திரலேகா படத்தில் வரும் காட்சியை மூன்று மாதங்கள் எடுத்தார்கள் என்று அப்படத்தின் நடனக் கலைஞர் லலிதா பாட்டி, ஒரு பேட்டியில் கூறியது பற்றிதான் இப்போது பார்க்கவுள்ளோம்.
பொதுவாக ஒரு படத்தை பல ஆண்டுகளாக இயக்கினார்கள் என்று கூறினால், நம்புவோம். ஏனெனில், அதற்கு பல தடைகள் ஏற்பட்டிருக்கலாம், திட்டங்கள் போட நேரமாகியிருக்கலாம். ஆனால், இந்த சந்திரலேகா படத்தின் ஒரு காட்சியை மட்டும் எடுக்கத் தொடர்ந்து 3 மாதங்கள் முயற்சிசெய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பழம்பெரும் நடனக் கலைஞர் லலிதா பாட்டி கூறியதைப் பார்ப்போம்.
“படத்தில் வரும் ஒரு Drum Dance காட்சிக்கு அதிகமான வெயில் தேவைப்பட்டது. ஆகையால் வெயில் வரும் நேரம் மட்டுமே அந்தக் காட்சியை எடுக்கமுடியும். இப்போது இருக்கும் வசதி எதுவும் அப்போது இல்லை. ஆகையால், 10 மணிக்கு மேல் வெயில் வந்தவுடன் ஆரம்பித்து, 3 மணி வரை படபிடிப்பு செல்லும். அதுவும் அதிகமான வெயிலில் படபிடிப்பு செய்யும்போது, அடிக்கடி மயக்கம் வரும். அதையெல்லாம் தாண்டிதான் மூன்று மாதங்கள் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது.” என்று அவர் பேசினார்.
1948ம் ஆண்டே ஒரு பிரம்மாண்ட படம் உருவானது என்றால், அது சந்திரலேகா படம்தான். அந்தப் படத்தில் வரும் ட்ரம் டான்ஸ் படம் இன்று வரை அனைவராலும் புகழப்படும் ஒன்று. அவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில் அத்தனைப் பேர் நடித்திருப்பர்.
இப்போது எடுக்கப்படும் அனைத்து பிரம்மாண்ட படைப்புகளுக்கும் விதையாக இருந்தது சந்திரலேகா படம். அதில் ஒருவர்தான் லலிதா பாட்டி. இவரது வயது 80க்கும் அதிகமாகவே இருக்கும். கிட்டத்தட்ட 60 தமிழ்ப் படங்களில் நடனமாடியிருக்கிறார். 18 வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், பலருக்கு ஒரு உதாரமாக இருந்து வருகிறார்.
இப்போது போன்ற தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாமல், அப்போதே வெறும் மனித உழைப்பை நம்பி உருவான அந்த பிரம்மாண்டத்திற்கு பின்னால் இன்னும் எத்தனை எத்தனை கதைகள் உள்ளனவோ?