விமர்சனம்: சென்னை சிட்டி கேங்ஸ்டர்- முடிஞ்சா சிரிங்க பாஸ்
ரேட்டிங்(2 / 5)
கார்த்திக் நடித்த அமரன் உட்பட பல்வேறு வெற்றிப் படங்களை தந்தவர் மறைந்த இயக்குநர் ராஜேஷ்வர். இவரது மகன் விக்ரம் ராஜேஷ்வர் தற்போது 'சென்னை சிட்டி கேங் ஸ்டர்' படத்தை இயக்கி உள்ளார்.
இவருடன் அருண் கேசவ் என்பவரும் இணைந்து இரட்டை இயக்குனர்களாக சென்னை சிட்டி கேங் ஸ்டர் படத்தை டைரக்ட் செய்துள்ளார்கள். லிவிங்ஸ்டன் நடத்தும் பீசா கடையில் வேலை செய்கிறார் வைபவ். லிவிங்ஸ்டனின் பழைய முதலாளி ஹூசைனி. இன்சூரன்ஸ் பணத்தை தவறான வழியில் பெற ஆசைப் படும் ஹூசைனி லிவிங்ஸ்டனின் உதவியை நாடுகிறார்.
லிவிங்ஸ்டன் வைபவிடம் பணம் திருடுபோவது போல் நாடகம் ஒன்றை நடத்த சொல்கிறார். இந்த திருட்டை நடத்தும் வைபவ் திருடும் பணத்தை ஒயின் ஷாப்பில் தொலைத்து விடுகிறார். மீண்டும் இந்த பணத்தை பெற வங்கி ஒன்றை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறார்.
இந்த திட்டத்திற்கு உதவி செய்ய எக்ஸ் கொள்ளையர்களான ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி என நான்கு பேரை அணுகுகிறார். உடலாலும், சிறிது மனதாலும் பாதிக்கப்பட்ட நால்வரும் வைய்பவுக்கு உதவ முன் வருகிறார்கள். இந்த கேங்ஸ்டர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெற்றதா என்பதே கதை.
படத்தின் முதல் பாதி நான்கு கேங்ஸ்டர்கள் செய்யும் லூட்டி குறிப்பாக, ஆனந்த ராஜ் போலீஸ் கமிஷனர் அன்பு செழியனாக மாறுவது, போன்ற ஒரு சில காட்சிகள் சிரிப்பை வர வழைத்து உட்கார வைக்கிறது. இரண்டாம் பாதி நகைச்சுவை என்ற பெயரில் ஒரே போன்ற காட்சிகள் திரும்ப, திரும்ப வருவது, திரைக்கதை நகராமல் அதே இடத்தில் இருப்பது, ஒரே போன்று முக பாவனைகளுடன் நடிப்பது என படம் முடிந்தால் பரவாயில்லை என்ற முடிவுக்கு வருகிறோம்.
கிங்ஸ்லி முதல் படத்திலிருந்து இன்று வரை ஒரே மாடுலேஷனில் நடிக்கிறார். கொஞ்சம் மாற்றி கொண்டால் மட்டுமே இனி வரும் படங்களில் இவர் கவனிக்க படுவார். ஜூனியர் கிங்ஸ்லி தான் இப்படி என்றால் சீனியர் லிவிங்ஸ்டனும் இப்படி தான் இருக்கிறார். நகைச்சுவை என்ற பெயரில் சாதாரண காட்சிகளில் கூட அதிக உணர்ச்சி வயபட்டு நடித்து நம்மை பயமுறுத்துகிறார். (பாக்யராஜ் காலத்தில் இருந்து நடிக்கிறீங்க கொஞ்சம் மாத்தி யோசிங்க சார்) ஹீரோ வைபவ் காதலிக்கும் போதும் பணத்தை திருடும் போதும், மற்ற அனைத்து காட்சிகளிலும் ஒரே போன்று நடிக்கிறார்.
இமான் இசை என்று டைட்டிலில் போடுகிறார்கள். பின்னணி இசையை கேட்கும் போது இமானின் இசை தானா என்று சந்தேகம் வருகிறது. படம் முடிந்து எண்ட் கார்ட் போடும் போது இமான் திரையில் தோன்றி ஒரு பாடல் பாடுகிறார். இந்த பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த பாடல் வரும் போது பார்வையாளார்கள் பலர் 'தப்பித்தால் போதும்' என்பதை போல் அரங்கை விட்டு வெளியே செல்வதை பார்க்க முடிந்தது!
பேங்க் கொள்ளை என்ற ஒன்லைனில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல படங்கள் வந்துள்ளன. இவற்றில் சில படங்களையாவது இந்த இரண்டு டைரக்டர்களும் பார்த்திருந்தால் ஒரு வேளை இதே ஒன்லைனில் நல்ல படத்தை தந்திருக்கலாம். மற்ற படி விருப்பமுள்ளவர்கள் சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தை பாருங்கள். பார்த்து விட்டு முடிஞ்சா கொஞ்சம் சிரிக்க ட்ரை பண்ணுங்க...