ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நேற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் 'ஜெயிலர்.' இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். பான் இந்தியா முறையில் சன் குழுமம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பல மொழி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்தியா முழுவதும் வெளியான இந்தப் படம் முதல் நாளிலேயே 52 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு வெளியாகி வசூலில் சாதனை புரிந்த படங்களை விடவும் இது மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். தற்போது ‘ஜெயிலர்’ படத்தை பார்த்துவிட்டு சமூகப் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இசைக் கல்லூரியில் அமைந்துள்ள தாகூர் திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் அவரது படக்குழுவினருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்து இருக்கிறார்.
அதையடுத்து, ஜெயிலர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் (X) பக்கத்தில், ‘‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்து வாழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. உங்களின் ஊக்கத்திற்கும், பாராட்டுகளுக்கும், உத்வேகமான வார்த்தைகளுக்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" எனத் தெரிவித்து இருக்கிறார்.