’சித்தா’ பட புரொமோஷன்.. நடிகர் சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்!

siddharth
siddharth
Published on

காவிரி நதிநீர் பிரச்னை கர்நாடகத்தில் தீவிரமடைந்த நிலையில், அங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரு எஸ்.ஆர்.வி திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சித்தார்த்திடம் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தகராறு செய்த காட்சிகள்தான் காண்போரை கோபமடைய செய்கிறது. 

நடிகர் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியிருக்கும் சித்தா படத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படம் ’சிக்கு’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து கன்னடத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியின்போதுதான் சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் வாக்குவாதம் செய்தனர் .

ஒரு கட்டத்தில், சித்தார்த்தை நோக்கி கன்னட அமைப்பினர் சரமாரி கேள்விகளை எழுப்பினர். தமிழ்ப்படங்களை அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். கர்நாடக நதிநீர் பிரச்னை நடந்துவரும் நிலையில் இந்த படம் தற்போது தேவையா என்றும் கேள்வி எழுப்பினர். நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தும்படியும் உரத்த குரலில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை பொருட்படுத்தாமல் சித்தார்த் சிரித்தபடியே செய்தியாளர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துவிட்டு வெளியேறினார். இந்த விவகாரத்தில் சித்தார்த்துக்கு ஆதரவாக பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்திருக்கிறார். அதில், பல ஆண்டுகளாக நிலவும் இந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து பிரச்னையை தீர்க்காத அரசியல்கட்சிகளை விட்டுவிட்டு, சாதாரண பொதுமக்களிடமும், திரைத்துறையினரிடமும் பிரச்னை செய்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கன்னடராக தனது வருத்தத்தை தெரிவிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். சித்தா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழலில் அதன் கன்னட வெளியீட்டில் பிரச்னை நடந்தது. திரைத்துறையினரை அதிர வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com