சூப்பர் ஸ்டார் 173 அப்டேட்! - ரஜினியை இயக்கப்போகும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்..!

rajini
rajini
Published on

"கமல் தயாரிப்பு - ரஜினி நடிப்பு! பல ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் இணையும் இந்த 'மெகா' கூட்டணியை வழிநடத்தப்போகும் இயக்குனர் யார் என்ற விவாதம் ஒட்டுமொத்த திரையுலகையும் தொற்றிக்கொண்டது.நீண்ட காலம் கழித்து கமலும் ரஜினியும் இணையும் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பு இன்றுடன் முடிந்து விட்டது . தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு இன்று(ஜன, 3) காலை 11 மணியளவில் வெளியானது. ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு குடும்பம் உண்டு” என்ற வாசகத்துடன் ரஜினிகாந்த பட போஸ்டர் வெளியாகியுள்ளது .

இன்றைய அறிவிப்பின்படி ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை இயக்குவது சிபி சக்கரவர்த்தி என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பலரும் ரஜினியின் இந்த திரைப்படத்தை இயக்கப் போவது யார்? என்று பல்வேறு யூகங்களை கிளப்பி இருந்த நிலையில் , யாரும் எதிர் பார்க்காத வகையில் சிபி சக்கரவர்த்தி இந்த கூட்டணியில் இணைந்துள்ளார்.

சிபி சக்கரவர்த்தி , இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'டான்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் கலந்த இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. டான் திரைப்படத்திற்கு பிறகு , ரஜினிகாந்திற்கு ஒரு காமெடி ஆக்ஷன் கலந்த திரைக்கதையை சிபி சக்கரவர்த்தி சொல்லியிருந்தார். அப்போது அந்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் ஓகே சொல்லாமல் இருந்திருந்தார்.ரஜினிக்கும் அக்கதை அப்போது பிடித்திருந்தாலும் ஒரு சில காரணங்களால் அப்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவரால் நடிக்க முடியவில்லையாம். 

2025 ஆம் ஆண்டு பிற்பகுதியில் கமலஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிப்பது உறுதியானது. 46 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைவது இந்திய அளவில் பேசுபொருள் ஆனது. இந்த திரைப்படம் நிச்சயம் பெரிய வெற்றியை பெற வைக்க வேண்டும் என்ற அழுத்தமும் இருந்தது. அனைவரும் எதிர்பாராத வகையில் சுந்தர்.சி இந்த திரைப்படத்தை இயக்குவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இயக்குனர் சுந்தர்.சி நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்களை எடுத்து வெற்றி பெற்றவர். மிக நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர். சுந்தர். சி எப்போதும் ஸ்டார் வேல்யூ பார்க்காமல், தனது நகைச்சுவை கதைகளை மட்டுமே நம்பி திரைப்படங்களை எடுக்க கூடியவர். இவரது படத்தின் காட்சி அமைப்புகள், ஒவ்வொன்றும் நகைச்சுவையாகவும் மிகவும் சுவாரசியமாகவும் இருப்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இவர் ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

அனைவரும் நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினியை ஒரு நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படத்தில் எதிர்பார்த்து இருந்த நிலையில், தலைவர் 173 திட்டத்திலிருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் இயக்குனர் என்ற பேச்சுகள் அடிபட்டது. கூலியின் கலவையான விமர்சனத்தினால் லோகேஷ் கனகராஜை விட நெல்சனுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பட குழுவினரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

அதன் பின்னர் பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் , ஆர்.ஜே. பாலாஜி, அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் , ரஜினிகாந்தின் ஆஸ்தான இயக்குனர்களான கே.எஸ். ரவிக்குமார் அல்லது சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கூட இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.இன்னும் பெயரிடப்படாத ' தலைவர் 173' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் , ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகிக்க உள்ளது.

இந்நிலையில் தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இன்று வெளியாகியுள்ள போஸ்டரின் படி கத்திரிக்கோல் , துப்பாக்கி , ஊசி போன்றவை இருப்பதால் திரைக்கதை போதைப் பொருள் சம்மந்தமான அதிரடி திரைப்படமாக இருக்கும் என்று யூகிக்கலாம். அடுத்த ஆண்டு 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படத்தை வெளியிட உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com