கம் பேக் 'முத்தழகு' - கொட்டேஷன் கேங்!

Qutation Gang
Qutation Gang

'தொரட்டிக் கண்ணு கருவாச்சியே' இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், இப்பாடல் இடம் பெற்ற ‘பருத்திவீரன்’ படமும் , இந்தப் படத்தில் நடித்த பிரியா மணியும்தான் நமது நினைவுக்கு வந்து போகும். பதினெட்டு ஆண்டுகள் கழித்தும் இப்படத்தில் 'முத்தழகு' பிரியா மணி பேசப்படுகிறார். பருத்திவீரனில் புழுதிக் காட்டில் மலர்ந்த காதலுக்கு மண் சார்ந்த நடிப்பை பிரமாதமாகத் தந்தவர் பிரியாமணி. மறைந்த இயக்குநர் பாலுமஹேந்திராவால் அடையாளம் காணப்பட்டவர் இவர். பருத்திவீரன் படத்தில் நடித்ததற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு தனது திறமையை வெளிப்படுத்தும் படங்கள் இவருக்கு பெரிதாக அமையவில்லை.

ராவணன், சாருலதா போன்ற ஓரிரு திறமையை வெளிப்படுத்தும் படங்களில் மட்டுமே நடித்தார். பெரும்பான்மையான தமிழ் இயக்குநர்கள் இவரைக் கவர்ச்சி கதாநாயகியாகவே படத்தில் பயன்படுத்தினார்கள். தமிழ் சினிமா பிரியாமணியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். பிற மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக் களத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த விவேக் கே.கண்ணன். 'கொட்டேஷன் கேங் '(Qutation gang) என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியாமணி. இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி உள்ளது. ட்ரைலரில் கையில் கத்தியுடன் பலரைக் கொலை செய்வது போல் ஆக்ரோஷமான பிரியாமணியை பார்த்து, ‘நம்ம முத்தழகா இது’ என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், அஷ்ரப் மல்லிசேரி போன்ற பல திறமை வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ‘சாதாரணமாகவே நம்ம பிரியாமணி நன்றாக நடிப்பார். சிறந்த நடிகர்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும் என்றால் கேட்கவா வேண்டும்? நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார் முத்தழகு’ என்கிறது அந்தப் படக்குழு.

ஒரு ஆக் ஷன் த்ரில்லர் படமான, ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் கூலிக்காக கொலை செய்யும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார் பிரியா மணி. பொதுவாக, ஹீரோயின்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் இதுபோன்ற படத்தில் தைரியமாக நடித்துள்ளார் பிரியாமணி. இந்தப் படத்தில் நடிக்கும் முன் சண்டை பயிற்சியாளரை வரவழைத்து தனியாக பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார் இவர். ‘இதுபோன்ற கூலிக்கு கொலை செய்யும் கேரக்டரில் ஒரு பெண் நடிகலாமா?’ என்று ஊடகத்தினர் கேள்வி கேட்டால், ‘ஹீரோக்கள் பலர் இதுபோன்ற கேரக்டரில் நடிக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கேள்வியை முன் வைப்பீர்களா? இது போதை பழக்கத்திற்கு எதிரான படம்’ என்கிறார் பிரியாமணி. ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே பலர் இதைப் பார்த்து விட்டனர். வரும் ஜூலை மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது. பெரிய ஹீரோக்கள் யாருடனும் ஜோடியாக நடித்ததில்லை பிரியாமணி. இருந்தாலும் இவரது நடிப்பை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘கொட்டேஷன் கேங்’ படம் பிரியா மணிக்கு இன்னும் ஏராளமான ரசிகர்களைப் பெற்று தரும் என்பதில் வியப்பில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com