கனெக்ட் - நன்மை தீமைக்கான போராட்டம்!

விமர்சனம்!
கனெக்ட்
கனெக்ட்
Published on

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம் 'கனெக்ட்'. நயன்தாரா, சத்யராஜ், வினய், அனுபம் கர் நடித்துள்ளார்கள். அஸ்வின் சரவணன் மற்றும் காவியா ராம்குமார் கதை எழுதியுள்ளார்கள். அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வந்து ரசிகர்களை அசத்தவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த பேய்கள் மறுபடியும் திரையை எட்டி பார்க்க வந்து விட்டன. பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளுக்கும் கடவுளை ஏற்றுக் கொள்ளாத சாத்தான்களுக்கும் இடையே நடக்கும் முரண் தான் கனெக்ட் படத்தின் கதை. உலகமே முடங்கி இருக்கும் கோவிட் லாக் டவுன் நேரத்தில் கதை தொடங்குகிறது.

நகரத்தில் புகழ் பெற்ற மருத்துவர் ஜோசப் பினாய் (வினய்)தனது மனைவி சூசன் (நயன்தாரா )மகள் அனா (ஹன்யா நாவிஷா ) இவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கோவிட்டிற்கு சிகிச்சை செய்யும் ஜோசப் கோவிட் தாக்கி இறந்து விடுகிறார்.

அப்பாவின் மறைவால் பெரிதும் பாதிக்கப்படும் மகள் அனா . மறைந்த அப்பாவின் ஆவியுடன் பேச முயற்சிக்கிறார். இதன் பிறகு வித்தியாசமாக நடந்து கொள்கிறார் அனா அம்மாவும், தாத்தாவும் வேறு ஒரு பேய் அனா மீது வந்துள்ளதாக கண்டுபிடிக்கிறார்கள்.

மும்பையில் உள்ள சர்ச்சில் இருக்கும் பாதர் அகஸ்டினை (அனுபம்கர் ) தொடர்பு கொள்கிறார்கள். தந்தையும் ஆன்லைன் மூலம் அனா மீது இருக்கும் துஷ்ட சக்தியை விரட்ட முயற்சிக் கிறார். பி 98 நிமிட படத்தில் ஒரு திகில் விஸுவல் டிரீட்மென்ட் தந்துள்ளார் டைரக்டர். படத்தின் முடிவு நம்மால் கணிக்க முடிந்தால் கூட கதையை கொண்டு செல்லும் விதம் நம்மை கவர்கிறது.

நயன்தாரா
நயன்தாரா

யாரும் வெளியே வர முடியாத லாக் டவுன் கால கட்டத்தில் இது போன்ற பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்ற உணர்வை ரசிகனுக்கு தருவதில் டைரக்டர் வெற்றி பெற்றுள்ளார்.

அன்பு, பரிதவிப்பு என ஒரு சராசரி அம்மாவாக சபாஷ் போட வைக்கிறார் நயன்தாரா. தந்தையை இழந்த மகளாகவும், பேய் பிடித்த போது ஆக்ரோஷமாகவும் சிறந்த நடிப்பை தந்துள்ளார் ஹண்யா. சத்தியராஜ் நம் வீட்டு தாத்தாவை நினைவு படுத்துகிறார்.

ப்ரித்வி சந்திரசேகர் சில இடங்களில் எந்த வித இசையையும் ஒலிக்க செய்யாமல் விட்டுள்ளார். இந்த அமைதியான இடங்கள் நிறையவே பயமுறுத்துகின்றன. மணிகண்டன் ஒளிப்பதிவு திகிலை கண் முன் காட்டுகிறது. ஒரு சிறந்த ஹாரர் படத்தை கனெக்ட் உங்களுக்கு தருவது உறுதி.

கனெக்ட் -நன்மை தீமைக்கான போராட்டம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com