முன்னாள் உலக அழகியும் இந்தியாவின் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் பெயர் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகியுள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ராஸக் ஐஸ்வர்யா ராய் குறித்து தெரிவித்த மோசமான கருத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், இந்தியளவில் எக்ஸ் பொழுதுபோக்கு பிரிவில் ஐஸ்வர்யா ராயின் பெயர் ட்ரெண்டாகியுள்ளது.
27 வருடங்கள் திரையில் மின்னும் நட்சத்திரம்
ஐஸ்வர்யா ராய் 26 வருடங்கள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதற்கு முன்பு 1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வுச் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு விளம்பரங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய், சமீபத்தில்தான் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், 50 வயதிலும் தன்னுடைய வசீகர தோற்றத்தினால் இந்தியர்களின் உலக அழகியாக வலம் வர ஐஸ்வர்யா தவறியதில்லை.
27 வருடங்கள் புகழின் வெளிச்சத்தில் உள்ள ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி பல்வேறு சர்ச்சைகளில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் பெயர் அதிகளவு சர்ச்சைகளில் சிக்கி பேசப்பட்ட விஷயம் என்றால் அது, நடிகர் சல்மான் கானுடன்தான்.
சல்மான் கான், விவேக் ஓபிராய்!
இருவரும் 1999ல் நெருங்கி நண்பர்களாக இருந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கானின் பெயர் பத்திரிகைகளில் இடம்பெறத் தொடங்கியது. ஆனால், இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக பேசப்பட்ட கிசுகிசுக்கள் 2001ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால், தற்போதுவரை ஏதோ ஒருவகையில் ஐஸ்வர்யா ராய், சல்மான் குறித்த கிசுகிசுக்கள் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
இதேபோல், பாலிவுட் நடிகர் விவேக் ஓபிராயுடன் ஐஸ்வர்யா ராய் தொடர்புப்படுத்தி பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் சல்மான் கான் விவேக் ஓபிராயை தொலைபேசி மூலம் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பனாமா பேப்பர்கள்
சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புடன் (ஐசிஐஜே) இணைந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் இணைந்து 2016ல் பனாமா ஆவணங்களை வெளியிட்டது. இந்த ஆவணங்களில் பனாமா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சட்ட நிறுமமான மொசக் ஃபொன்செகா (Mossack Fonseca), தன் வாடிக்கையாளர்களுக்கு எப்படி சட்டவிரோதமாக கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சி செய்யலாம் என உதவி வழங்கியது.
இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி, 'பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் வெளியான பணச் சலவை மோசடி தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் ஆஜரானார். அவரிடம் 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. ஆனால், தற்போதுவரை இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அழுகும் அறுவை சிகிச்சையும்
நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 50 வயதிலும் அழகாக இருப்பதற்கு அவர் அழகுகாக பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. மூக்கு, உதடு, கன்னம் என பல்வேறு அழகுசாதன அறுவை சிகிச்சைகளை ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டுள்ளதால், அவலை பிளாஸ்டிக் முகம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். மேலும், நடிகை சோனம் கப்பூர் பேட்டி ஒன்றின்போது, ஐஸ்வர்யாவை ’Aunty’ என அழைத்த விவகாரம் பூதாகரமானது.
இதுபோல் பல்வேறு விமர்சனங்களை ஐஸ்வர்யா ராய் எதிர்கொண்டாலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் முகமாக உள்ளார் ஐஸ்வர்யா ராய்.