
தமிழில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற டாடா திரைப்படம் தெலுங்கில் பாபா என்று பெயரில் விரைவில் வெளியிடப் பட உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமாரின் ஒலிம்பியா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பிக் பாஸ் புகழ் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
இத்திரைப்படத்தில் அபர்ணாதாஸ், பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன்,விடிவி கணேஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கவின், அபர்ணாதாஸ் உடைய காதல், பிறகு திருமணம், திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை குழந்தை பிறப்பு அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள், தந்தை குழந்தை வளர்ப்பு முறை ஆகியவையே படத்தினுடைய கதைக்களம். எளிய கதையை மிக சிறப்பாக இயக்குனர் கணேஷ் கே பாபு எடுத்திருந்தார். படத்தில் கவினுடைய நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இதனால் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
படம் தமிழில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினர் படத்தை வேறு மொழிகளில் வெளியிட முயற்சி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தெலுங்கில் பாபா என்ற பெயரில் இத்திரைப்படத்தை வெளியிடப் படக் குழுவினர் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.