‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ நிறுவனம் சுமார் பதினாறு கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் எடுத்த திரைப்படம் காந்தாரா. கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் குறுநில மன்னர் ஒருவர் வனப்பகுதி அருகே இருக்கும் நிலத்தை பழங்குடி மக்களுக்கு தானமாக வழங்குகிறார். ஆனால், அந்த மன்னரின் சந்ததியினரே தனது முன்னோரால் தானமாக வழங்கப்பட்ட பூர்வீக நிலத்தை பழங்குடி மக்களிடம் இருந்து பறிக்கும் முயற்சியைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தது. காந்தாரா படத்தின் முதல் பாகம் பெற்றுத் தந்த வெற்றியைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக அந்தப் படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பட நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்களிடையே இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் காந்தாரா படத்தில் நடித்த நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு, ‘சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்’ பிரிவில் 2023ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி பெற்றதை அறிந்த சினிமா வட்டாரப் பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.