முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா வயது 69 இன்று மரணமடைந்தார்
இவர் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது இவருக்கு நடனம் வராது என்று கூறி இவரை திரைத்துறையை விட்டே ஒதுக்க நினைத்த சிலர், காலப்போக்கில் இவரை அழைத்து 'நீ தான் இந்த நடனத்தை ஆட வேண்டும்' என அழைத்தார்கள்.
தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு இப்படி பாக்கியராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சின்னா. 300 படங்களுக்கு மேல் நடனக் குழுவில் உதவியாளராக இருந்து நடன அமைப்புக்களும் செய்துள்ளார். சேஷூ மாஸ்டர் (சங்கராபரணம் படத்தின் டான்ஸ் மாஸ்டர்), பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, சலீம், வேம்பட்டி சத்தியம் போன்றவர்களிடம் வேலை பார்த்தவர்.
ஆந்திர மாநிலம் ஜங்கா ரெட்டி கூடம் இவரது சொந்த ஊர். இவருடைய தந்தை ஐதராபாத்திலுள்ள இசைக்கல்லூரியில் முதல்வராக இருந்தவர். பல வருஷங்கள் எப்படி, எப்படியோ என்னென்ன வேலைகளையெல்லாமோ பார்த்து கடைசியாக சேஷூ மாஸ்டரிடம் உதவியாளனாக சேர்ந்தார். இவருக்கு இனிய வாழ்வு இயக்குநர் பாக்கியராஜ் அவர்களின் வடிவத்தில் வந்தது. பல ஆண்டுகள் இவரது திறமையை உன்னிப்பாக கவனித்து வந்த பாக்கியராஜ் ''தூறல் நின்னு போச்சு'' படத்தில் இவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதை டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு படங்களில் இவருக்கு வாய்ப்பளித்தார். பாக்கியராஜ் சொந்தமாக தயாரித்த 'தாவணிக்கனவுகள்' படத்திற்கும் இவர் தான் நடன இயக்குநர்.
இது போக 'வாங்க மச்சான் வாங்க', 'உன்னை விட மாட்டேன்', ஆர்.சுந்தர ராஜனின் இயக்கத்தில் 'என்னைத் தெரிஞ்சா சொல்லாதீங்க' போன்ற பல படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். மேலும் புவனேஸ்வரி, நாகலெட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி,அம்மன் சீரியல்களில் நடித்த நடிகை ஜெனிபர் இந்த நடன இயக்குனர் சின்னாவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.