
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியோர் வரை உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தின் கிரைம் திரில்லர், ஸ்டைல், ஆக்ஷன் போன்றவற்றை ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம்.
ஜேம்ஸ் பாண்ட் என்பது 1953-ல் நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரமாகும். இயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட், எம்ஐ6 (EM6) என்ற உளவாளி நிறுவனத்திற்காக பணிபுரியும் ஒரு பிரித்தானிய நாட்டை சேர்ந்த உளவாளி ஆவார். இவரை பொதுவாக 007 என்றும் அழைக்கப்படுவார்.
இதுவரைக்கும் இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இது தவிர டிவி தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் வெளியாகி இருக்கின்றன.
'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே ஒவ்வொரு படத்திலும் உயிர் கொடுக்கும் விதமாக நடித்துள்ளது மட்டுமில்லாமல் பெரும் புகழும் அடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த திரைப்படங்கள் 7 பில்லியனுக்கு அதிகமாக வசூல் செய்து உலகளவில் நான்காவது மிக அதிக வசூல் செய்த திரைப்படங்களாக திகழ்கின்றது.
தொடக்க காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் ஆக சீன் கானரி நடித்தார். அதனைத்தொடர்ந்து டேவிட் நிவென், ஜார்ஜ் லாசென்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னென் ஆகியோர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தனர்.
2006-ம் ஆண்டு முதல் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து வந்தார். ‘கேசினோ ராயல்', 'குவாண்டம் ஆப் சோலஸ்', ‘ஸ்கைபால்', ‘ஸ்பெக்டர்', ‘நோ டைம் டு டை' ஆகிய ஐந்து படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடைசியாக 2021ல் 'நோ டைம் டு டை' என்ற படம் வெளியான பிறகு ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக டேனியல் கிரேக் அறிவித்தார்.
அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. டேனியல் கிரெய்க் வெளியேறி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்து, அடுத்த ஜேம்ஸ் பாண்டின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
டேனியல் கிரேக்கிற்குப் பிறகு அடுத்த புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, பல பெயர்கள் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த பட்டியலில் ஹென்றி கேவில், ஆரோன் டெய்லர்-ஜான்சன் மற்றும் தியோ ஜேம்ஸ் ஆகியோர் முன்னணி போட்டியாளர்களாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள். ஆனாலும் டேனியல் கிரெய்கிற்குப் பதிலாக அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மற்றவர்களை விட ஆரோன் டெய்லர்- ஜான்சனுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் 007 நடிகரை பிரான்சாய்ஸ் உரிமையை பெற்ற அமேசான் எம்.ஜி.எம். ஸ்டூடியோ தேர்வு செய்துள்ளது. புதிதாக நடிக்க உள்ள 26-வது ஜேம்ஸ்பாண்ட் நடிகர் யார் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறது.