
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். தேவிஸ்ரீ பிரசாத் பொதுவாக டிஎஸ்பி என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறார். 1999-ம் ஆண்டு தனது 19-வது வயதில் தேவி படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 2001-ம் ஆண்டு பத்ரி படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவரது இசையில் உருவான “டேடி மம்மி வீட்டில் இல்ல”, “வாடி வாடி வாடி கை படாத சீடி”, “அட டா அட டா அட டா என்னை ஏதோ செய்கிறாய்..”, “என் பேரு மீன குமாரி..” உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் எப்போது கேட்டாலும் தாளம் போட வைக்கும். இவரது இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் பாடல்களுக்கு இசையமைப்பதுடன், பல பாடல்களையும் பாடியுள்ளார். இவரது 25 வருட இசை வாழ்க்கையில், 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது வெளியாகி வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படத்திற்கும் தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இவரது இசையமைப்பில் உருவான பாடல் ஹாலிவுட்டில் ‘காப்பி’ அடித்துள்ளதாக தேவி ஸ்ரீபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில், 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்திருந்தனர். படத்தில் இடம்பெறும் ‘ஓ சொல்றியா மாமா...' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட சமந்தாவின் ‘மார்க்கெட்'டும் இந்த பாடல் மூலமாக தான் எகிறி போனது.
இதற்கிடையில் தனது இசையமைப்பில் உருவான ‘ஓ சொல்றியா மாமா...' பாடலை ஹாலிவுட்டில் காப்பியடித்திருப்பதாக தேவி ஸ்ரீபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது பாடலை ஹாலிவுட்டில் காப்பியடித்துள்ளார்கள் என்பது அறிந்து அதிர்ந்து போனேன். சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாமா? என்றும் யோசித்து வருகிறேன்.
அதேவேளை இந்த பாடல் ஹாலிவுட் வரை சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் ஈர்ப்பை எண்ணி பெருமைப்படுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவி ஸ்ரீபிரசாத் குறிப்பிட்டது, பிரபல ஹாலிவுட் பாடகி அதியே டெனிசின் ‘அன்லயானா' ஆல்பம் பாடல் தான் என்று கூறப்படுகிறது.