
தமிழ் திரையுலகில் முன்னனி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் திறமையுடன் விளங்கும் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குபேரா' திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து இது தனுஷின் இரண்டாவது தெலுங்கு திரைப்படமாகும். பிரபலமான தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 20-ம் தேதி வெளியான இந்த படத்தில் நாகர்ஜுனா , ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலையும் குவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தெலுங்கு ரசிகர்கள்தான்.
ஆந்திராவில் அதிக வசூல் செய்த தனுஷ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது ‘குபேரா’. இந்த நிலையில் இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அளவுக்கு, தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். இந்தப் படத்தின் வசூலும் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
ரூ.150 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், உலகம் முழுவதும் இதுவரை ரூ.118 கோடியை வசூலித்திருக்கிறது. இந்தியாவிற்குள் ரூ.70 கோடி வசூலை தொட்டிருக்கிறது. இதில் தெலுங்கு மொழியில் ரூ.49 கோடியையும், தமிழ் மொழியில் வெறும் ரூ.19 கோடியையும் மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த அடிப்படையில் ‘குபேரா' படம் தமிழ்நாட்டில் பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இதுபற்றி படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா, ‘தமிழ் ரசிகர்களிடம் 'குபேரா' அதிக வரவேற்பைப் பெறும் என்று நான் நம்பினேன். தமிழ் ரசிகர்கள் தங்களுடன் பொருத்திக் கொள்ளும் வகையில் பல அம்சங்கள், ‘குபேரா' படத்தில் இருக்கிறது. அதைவிட முக்கியமாக இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இருக்கிறார். அப்படி இருந்தும், தமிழ்நாட்டில் படம் போதிய வசூலைப் பெறாதது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் படம் பிக்கப் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழ், ஹிந்தி இரு மொழிகளிலும் இந்தப் படத்தை உரிய விதத்தில் கொண்டு போய் சேர்க்கவில்லை என்று தனுஷ் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் தெலுங்குத் திரையுலகத்தில் பிரபலமானவர்கள் என்பதால் அங்கு இந்தப் படம் நிறையவே வசூல் செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.