
தமிழ் திரையுலகில் மெல்ல மெல்ல வளர்ந்து தனது திறமையால் படிப்படியாக உயர்ந்து இன்று தனக்கென தனி இடத்தை பிடித்து அசைக்க முடியாத முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய கலைப்பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்று பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குநர், பாடகர் என பன்முக திறமை கொண்ட தனுஷின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தனுஷின் நடிப்பில் வெளிவர உள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.
தனுஷின் நேரடி தெலுங்கு படமான இந்த படத்தில் தனுஷ் 'தேவா'என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டிம், படத்தொகுப்பை கார்த்திகா ஸ்ரீனிவாசும் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 20-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. என்னதான் மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியிருந்தாலும் இது ஒரு நேரடி தெலுங்கு படம் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த படத்தின் 2-வது பாடல் வரும் நாளை (ஜூன் 2-ம்தேதி) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் 20-ம்தேதி வெளியாகவுள்ள இந்த படம் தொடர்பாக இதுவரை பெரிதாக எந்தவொரு ஹைப்பும் எழவில்லை என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில், தான் தனுஷ் இந்த படத்தில் நல்லா நடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு படத்தின் மீதான ரசிகர்களின் ஹைப் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தில் நடித்த நாகர்ஜுனா, ரஷ்மிகா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என தெரிகின்றது.