
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான தனுஷ் தனது கடின உழைப்பால் படிப்படியாக வளர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, பாடல்கள் எழுவது, பாடல்கள் பாடுவது, படத்திற்கு கதை-திரைக்கதை எழுதுவது, இயக்கம், தயாரிப்பு என்று சினிமாவின் பல துறைகளிலும் கால் பதித்து, அவை அனைத்திலும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்து வெளிவந்த விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பன்முகம் கொண்டவராக கலக்கி வரும் தனுஷ் நேரம் இல்லாமல் எப்போதும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் வகையில் ஏகப்பட்ட படங்கள் இவரது கைவசம் உள்ளது. கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது.
இவர் தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும். இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா மற்றும் பாலிவுட் நடிகர் ஜிம் சராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தில் விவேகா எழுதி, தனுஷ் பாடிய 'போய்வா நண்பா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் தெலுங்கு பதிப்பையும் தனுஷே பாடியுள்ளார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் குபேரா படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.