
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரண் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுடன், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
1930-40 களின் காலகட்டப் பின்னணியில் இப்படம் உருவாகிவரும் நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தனுஷ் பிறந்தநாள் அன்று 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகவிருக்கும் நிலையில், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படமான இந்தி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
'TERE ISHK MEIN' என்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய இந்தி படத்தில், தனுஷ் நடிக்கவிருக்கும் நிலையில், இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தனுஷ் நடிப்பில் வெளியான 'ராஞ்சனா' படத்தை இயக்கியவர் ஆவார்.
ஹிமான்சு ஷர்மா இப்படத்தை தயாரிக்க, விஷால் சின்ஹா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் 2024ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
'ராஞ்சனா' திரைப்படம் வெளியாகி இன்று பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து பதிவிட்டுள்ள தனுஷ், 'தேரே இஷ்க் மெய்ன்' படம் மூலம் என்ன மாதிரியான பயணம் எனக்கு காத்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு சாகசமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த டைட்டில் வீடியோ...