பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் கல்கி 2898 AD என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின், பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர் ஒருவர் பிரபாஸின் ரசிகர் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிரான பிரபாஸ், சில ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகத் திகழ்ந்து வருகிறார். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இவரது இமேஜ் பான் இந்தியா அளவில் உச்சத்திற்கு சென்று விட்டது. தெலுங்கில் மட்டும் பிரபலமாக இருந்த பிரபாஸ் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற பலமொழித் திரைப்பட நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
பாகுபலி படத்தின் 2 பாகங்களும் மெகா வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்தடுத்த கதைத் தேர்வுகளில் கவனமாக இருந்தார். ஏனெனில் ஒருமுறை பான் இந்தியா அளவிற்கு உயர்ந்து விட்டால், அதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா! இருப்பினும் சாஹா மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவினாலும், சலார் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் பிரபாஸ். கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகிய இருவரையும் வைத்து இயக்கிய சலார் திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்து நல்ல வசூலையும் பெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் திரைக்கு வந்தது 'கல்கி 2898 AD' திரைப்படம். இப்படம் உலகளவில் ரூ.1,100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி 1,000 கோடி கிளப்பில் இணைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் நாக் அஸ்வின் சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
நாக் அஸ்வின் கூறுகையில், “பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸின் மிகப்பெரிய ரசிகர். வளர்ந்து வரும் நடிகருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் இருப்பதைக் கண்டு, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த 'சலார்' படத்தை அமிதாப் பச்சன் இரண்டு முறை பார்த்து ரசித்துள்ளாராம். அதேபோல் பிரபாஸ், அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர். இவர்கள் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைத்ததை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. கல்கி படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றியதில் பிரபாஸ் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்” என்று அவர் தெரிவித்தார்.
கல்கி திரைப்படத்தில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்த அமிதாப் பச்சன், பிரபாஸூடன் மோதும் சண்டைக் காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தன. ஒருவருக்கொருவர் ரசிகராக இருந்து, ஒரே படத்தில் பணியாற்றிய அனுபவம் இருவருக்கும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் அல்லவா!