’தி எலிஃபாண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணப்படப் பிரிவில் வென்றது இன்று டாக் ஆஃப் தி டவுன் ஆகி விட்டது. எல்லோருக்கும் தெரிந்த இந்த வெற்றியில் நாம் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமும் இருந்தது. அது என்ன தெரியுமா?
விருது வாங்க மேடை ஏறிய தயாரிப்பாளர் குனீத் மோங்கா அணிந்திருந்த சில பெர்ஸனல் அவுட் ஃபிட்ஸ் தான் அவை. மோங்கியா அந்த இரவில் விருதுக்காக மேடை ஏறும் போது சிவப்பு நிற டான்சோய் பட்டுப்புடவை அணிந்திருந்தார். அதை நாம் உற்றுக் கவனிக்கத் தவறி இருந்தால் அந்தப் புடவையின் மோட்டிஃப்களை தவற விட்டிருப்போம். வாங்கியது யானைகளின் சிறப்பைப் பற்றி உலகறியச் செய்யும் விருதல்லவா? அதற்காகவே கஸ்டமைஸ் ஆக அந்தப் புடவை நெசவு செய்யப்பட்டிருந்தது. புடவை முழுதும் குட்டி குட்டியாக யானை மோட்டிஃப்களே இடம் பெற்றிருந்தன.
அத்துடன் புடவைக்கு அவர் குத்தியிருந்த ப்ரூச்சைக் கவனித்தீர்களா? அதுவும் ஒரு சின்ன காம்பாக்ட் உலோக யானை தான்.
இதைத்தாண்டி இன்னொரு சர்ப்ரைஸும் இருந்தது. அது அவரது ஸ்டைலிஷான கைப்பை. யானை நிற்பதைப் போன்று தயாரிக்கப்பட்டிருந்த அந்த க்ளச் டைப் கைப்பை வெகு அழகாய் கவனம் ஈர்த்தது.
இப்படி மொத்தமும் யானையைத் தன் உடையிலிருந்து கைப்பை வரை குனீத் மோங்கா தாங்கி நின்றிருந்தார். நீங்கள் கவனிக்கத் தவறி இருந்தால் மீண்டும் ஒருமுறை அவர் விருது வாங்கும் நிகழ்வை யூடியூபில் ஓட்டிப் பாருங்கள்.
இதை இவர் மட்டுமல்ல மேலும் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் இப்போது ஒரு பயிற்சியாகவே மேற்கொள்கிறார்கள்.
இப்படியான ஒரு விஷயத்தை இதற்கு முன்பு பாகுபலி 1 & 2 திரைப்படங்களுக்கான ஆடியோ லாஞ்ச், ட்ரெயிலர் லாஞ்ச், திரைப்படத்துக்கான அயல் மொழி அறிமுகம் உள்ளிட்ட விழாக்களில் இயக்குனரும், நடிகர், நடிகைகளும் அந்த திரைப்படத்தில் பங்கேற்ற அத்தனை தொழில்நுட்ப வல்லுநர்களுமே தங்களது ஆடைகள்,, அணிந்திருந்த ஃபேஷன் ஜூவல்லரிகள் என அனைத்திலும் படத்தின் பெயரை அச்சிட்டோ அல்லது திரைப்படம் சார்ந்த அடையாளங்களைப் பதித்துக் கொண்டோ உலவி ஒரு தனிநபர் மார்கெட்டிங் உத்தியாக படம் குறித்து எதிரில் இருப்பவர்களுக்கு சதா நினைவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
இதை எஃபெக்டிவ் மார்கெட்டிங் உத்திகளில் ஒன்றாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இதன் மூலமாக திரைப்படம் குறித்த நினைவுகள்
வலுப்படுவதுடன். அதே மாதிரியான பொருட்களை வாங்கும் மோகமும் பார்வையாளர்களிடையே அதிகரிக்கிறது என்கிறார்கள் அவர்கள்.
பாகுபலி திரைப்படம் வெளிவந்த போது , அத்திரைப்படத்தில் இடம்பெற்ற அமரேந்திர பாகுபலியின் வாள் அதே போன்ற பொம்மைக் கத்திகளின் விற்பனைக்கு அடிகோலியது. சிறுவர்களுக்கான பொம்மைகள் மட்டுமல்ல கார்ட்டூன் தொடர்களுக்கான வாய்ப்புகளையும் படத்திற்கான செல்ஃப் மார்க்கெட்டிங் உத்திகள் பெற்றுத்தந்தன என இயக்குநர் ராஜமெளலி தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.