
மாணவர்கள் மத்தியில் இருக்கும் ஜாதிய வன்மத்தை காட்டும் மோசமான விஷயம் சமீபத்தில் நாங்குநேரியில் நடந்துள்ளது.
தமிழகமே வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் இது.ஜாதிய கொடுமையை எதிர்த்து பல்வேறு படங்கள் இப்போது வந்து கொண்டுள்ளது.இந்த வரிசையில் தற்போது தமிழ்க் குடிமகன் (son of tamilnadu ) என்ற படம் வரவுள்ளது. இப்படத்தை இசக்கி கார் வண்ணன் இயக்கி தயாரித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு சேரன் இப்படத்தில் நடித்துள்ளார். லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர்களுடன் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, பேராசிரியர் மு. ராமசாமி நடித்துள்ளார்கள். திரைப்படத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த கதாநாயகன் ஜாதி தொழிலை செய்ய மறுக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளின் பின் புலத்தில் கதையை உருவாக்கி இருக்கிறார் டைரக்டர்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு நிகழ்வு இன்று நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் தங்கர் பச்சன் " நான் சிறு வயதிலேயே பத்திரக்கோட்டை கிராமத்திலிருந்து வந்துவிட்டேன். இப்போது என் கிராமம் உட்பட பல கிராமங்களில் நான் சிறுவயதில் பார்த்த ஜாதி இல்லை. ஆனால் ஜாதியை இன்னமும் உயிர்ப் புடன் வைத்திருப்பது அரசியல் வாதிகள் தான். நாம் சரியான தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்ப் பட்டால் தான் ஜாதி ஒழியும். மசாலா படங்களில் என்ன இருக்கிறது. இது போன்ற நல்ல படங்களை ஆதரியுங்கள் "என்றார்
" என் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் உனக்கு ஒரு வலி இருக்கும்.இதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உன் படபடப்பை உன் படைப்பில் காட்டிவிடக்கூடாது. உன் வலியை பத்திரமாக வைத்துக்கொள்.தேவை வரும் போது படைப்புகளில் காட்ட வேண்டும் என்பார். சேரன் அவர்களிடம் உதவி இயக்குநாராக சேர ஆசைப்பட்டேன். இந்த படத்தில் சொல்லப்பாடாத சிறிய மக்களின் வலி இருக்கிறது. இசக்கி கார் வண்ணன் இந்த வலியை சரியாக கடத்தி இருப்பார் என்று நினைக்கிறேன். இன்று அனைவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது.என்னுடைய அரசியல்தான் என் படங்களில் இருக்கிறது " என்கிறார் மாரி செல்வராஜ்.
சேரன் பேசும்போது "இந்த படத்தின் இயக்குநர் இசக்கி கார் வண்ணன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் எதையும் பார்த்தது கிடையாது. ஆனால் தமிழ்க்குடிமகன் படத்தின் கதையின் மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்புக்கொண்டேன். பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், இசக்கி கார் வண்ணன் போன்றவர்கள் ஜாதியைப்பற்றி பேசவில்லை. தங்கள் உரிமையை பற்றி பேசுகிறார்கள். கொஞ்சம் சத்தமாக சொல்கிறார்கள் இதை ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து கைகளும் சேர்ந்து இருந்தால்தான் சமுதாயம் முன்னேறும் என்றார்.தான் நினைத்த சில காட்சிகளை தான் நினைத்தது போல தன் கிராமத்தில் எடுக்க முடியாத அளவிற்கு ஜாதி அழுத்தம் உள்ளது என இயக்குநர் குறிப்பிட்டார்.