அசுர வளர்ச்சியடைந்த அட்லி.. 5 படங்களில் பான் இந்தியா தொட்டு சாதனை!

அட்லி
அட்லி
Published on

இயக்குனர் அட்லி நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தை இயக்கி முதல் படத்திலேயே மாஸ் காட்டினார். படிப்படியாக வளர்ந்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தை இயக்கி அசத்தியுள்ளார். அட்லி, இன்று அவரது 37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் கடந்து வந்த பாதை பற்றி பார்க்கலாம்.

அட்லியின் உண்மையான பெயர் அருண் குமார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 1986 செப்டம்பர் 21ஆம் தேதி பிறந்தார். சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பி.எஸ்சி முடித்த அருண்குமார், இயக்குநர் சங்கரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ஷங்கர் இயக்கிய நண்பன், எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். இதற்குப் பிறகு, சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தப் படம் பெரும் கவனத்தைப் பெற்றது.

இதற்குப் பிறகு, ராஜா ராணி படத்தின் கதையை வைத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்களை அணுகிய நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ பேனரில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது.

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி, அந்த ஆண்டின் குறிப்பிடத் தகுந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

சுமார் 25 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ராஜா ராணி, கிட்டத்தட்ட 84 கோடி ரூபாயை வசூலைக் குவித்தது. விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வங்க மொழியிலும்கூட இப்படம் ரீ -மேக் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றதால், முதல் படத்திலேயே அட்லியின் க்ராஃப் உச்சத்திற்குச் சென்றது. இரண்டாவது படத்தில் தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. இதற்குப் பிறகு, 'பைரவா' என்ற படத்தில் நடித்த விஜய், அதற்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் அட்லிக்கே அளித்தார். அந்தப் படம் மெர்சல்.

அடுத்த படம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தான். பிகில் படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அட்லி தனது அடுத்த படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளி வந்தன. ஜவான் படம் வெளிவந்த பிறகு, கலவையான விமர்சனங்களே வெளிவந்தன என்ற போதும் இந்தப் படம் வசூலில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது.

நான்கு நாட்கள் முடிவில் இந்தப் படம் 485 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. விரைவிலேயே படத்தின் மொத்த வசூல் 800 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீயை பொறுத்தவரை மொத்தம் ஐந்தே படங்களை இயக்கியிருக்கிறார். அதில், 3 படங்கள் டாப் நடிகரான விஜய்யை வைத்து தான். வெறும் 5 படங்களில் உலகளவில் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனராக உருவெடுத்தார் அட்லி. இதனால் இயக்குனர் அட்லி உச்சப்பட்ச மகிழ்ச்சியில் உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com