தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள அட்லி ஜவான் படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
ஷாரூகான், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கு சாதனைப்படைத்தது. இதன்மூலம் பாலிவுட் மட்டுமல்லாது இந்திய திரையுலகில் கவனம்பெற்ற இயக்குநராக மாறியுள்ளார்.
இந்தப் படத்தை அடுத்து சில மாதங்கள் ஓய்வெடுப்பதாகக் கூறிய அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கானை ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். அவர் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் இப்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.