மிஸ்கினுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை என இயக்குநர் இசையமைத்துள்ள டெவில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா பேசியுள்ளார்.
டெவில் திரைப்படத்தை மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மண்ட் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைச் சவரக்கத்தி திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். பொதுவாக திரைக்கு பின்னார் இருக்கும் இயக்குநர்கள் சமீபகாலமாக நடிகர்களாகவும் நடித்துவருகின்றனர். ஆனால், எதையும் வித்தியாசமாக அணுகும் இயக்குநர் மிஷ்கின் நடிப்பை தாண்டி தற்போது இசை துறையிலும் கால் பதித்துள்ளார். அதற்கான முதற்கட்ட அடித்தளமாக டெவில் படம் அமைந்துள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பல முக்கிய திரையுலகினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இசை மேதை பீம்சென் ஜோஷி அவர்களின் சிஷ்யரான 90 வயது நிரம்பிய மிஷ்கினின் இசைகுரு ராமமூர்த்தி பேசியதாவது,” காலையில் கூட மிஷ்கினும் நானும் ’ஸ்வாதி சிந்து’ என்னும் ராகத்தை இணைந்து கண்டுபிடித்தோம். சைந்தவி, விஜய் பிரகாஷ் என்னுடைய மாணவர்கள்தான். ஆனால் என்னுடைய சிறப்பான மாணவன் என்று நான் மிஷ்கினைத்தான் கூறுவேன். அவன் ஒருநாளைக்கு மொத்தம் 8 மணி நேரம் இசை கற்றுக்கொள்ளவே நேரத்தை செலவிடுவான். என்னுடைய சிறந்த மாணவனின் படம் வெற்றிபெற வாழ்த்துகள்.” எனக் கூறி முடித்தார்.
இயக்குநர் பாலா பேசும் போது, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றிச் சொன்ன ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் இளையராஜாவிடம் யார் அது…? ஷார்ட்ஸ் ஷூவைப் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலைவது என்று கேட்டேன்.
அதற்கு இளையராஜா, அவன் தான் மிஷ்கின், அவனைச் சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே அவன் மிகப்பெரிய Intellectual என்று கூறினார். அவர் எந்த கோணத்தில் அப்படிக் கூறினார் என்று தெரியாது. அவனைப் பார்க்கும் போது ஒரு டெவில் போலத்தான் இருக்கிறான். நான் என்னுடைய போனில் அவன் நம்பரைக் கூட Wolf என்று தான் பதிவு செய்து வைத்துள்ளேன்.
வணங்கான் படத்தில் உதவி இயக்குநராக இல்லை, இயக்குநராகவே நடித்துள்ளான். அவன் நடிக்கின்ற காட்சியை அவனையே இயக்கச் சொல்லிவிட்டேன். இயக்கி முடித்ததும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அது வித்தியாசமான முறையில் சிறப்பாக வந்திருந்தது. நான் ஓகே என்று கூறிவிட்டேன். ஆனால் மிஷ்கின் நீங்கள் மீண்டும் ஒரு முறை ஓகே வா என்று பார்த்து சொல்லுங்கள் என்றான். எனக்கு இவன் ஏன் இப்படி சொல்லுகிறான் நன்றாகத் தானே வந்திருக்கிறது என்று சந்தேகம் தோன்றியது. நான் மீண்டும் பார்த்தேன்.
அந்தக் காட்சியில் ஒரு 20 நடிகர்கள் இருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் இவன் தன் கூலிங் க்ளாஸை கழட்டி விட்டு, தலையை குனிந்து கொண்டு கையை கட்டி நிற்க வேண்டும். அப்படி நிற்கும் போதே கூட்டத்தில் ஒரு பெண் கண் சிமிட்டுவது கேமராவைப் பார்ப்பதைப் போல் இருப்பதை கவனித்து விட்டுத்தான் என்னிடம் மீண்டும் பார்க்கச் சொல்லி இருக்கிறான் என்று புரிந்தது. எனக்கு ஒரு வாரம் தூக்கமே வரவில்லை. இவன் எப்படி இந்த சிறிய பிழையைக் கூட கண்டுபிடித்தான், நாம் எப்படி அதை தவறவிட்டோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உண்மையாகவே மிஷ்கினுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை என்று தெரிவித்தார்”
இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, “மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். இசையமைப்பாளரும் இசைக் கலைஞர்களும் ஒரு மேடையின் மையத்தில் செண்டர் ஸ்டேஜ் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு இதுவாகத்தான் இருக்கும். இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை நம் அனைவர் முன்னால் மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு Courage, Confident and Commitment தேவை. இந்த மூன்றுமே மிஷ்கினுக்கு இருக்கிறது” என்றார்.