
சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் ஃபிட்டாக உள்ளனர். இருப்பினும் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் நடிகர்கள் வெகு சிலரே. சிக்ஸ் பேக்கை அதிக வருடங்களுக்கு பராமரிப்பது கூட கடினம் என்பதை பழைய நடிகர்களை பார்க்கும் போதே நமக்கு தெரிந்து விடும். சில நடிகர்களுக்கு இளமையாக இருக்கும் வரை தான் சிக்ஸ் பேக் எல்லாம். வயதான பிறகு அதெல்லாம் வெறும் பேச்சாகவே இருக்கும். ஆனால் வயதான காலத்திலும் சிக்ஸ் பேக்குடன் வலம் ஒரு நடிகரைப் பற்றி நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து, பின் காமெடி நடிகராக கலக்கியவர் மொட்டை ராஜேந்திரன். இவரது தாத்தா மற்றும் தந்தை இருவருமே சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணிபுரிந்தனர். இருப்பினும் தான் ஒரு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் திரையுலக வாய்ப்பைத் தேடி அலைந்தார் மொட்டை ராஜேந்திரன். ஆனால் கேலி, கிண்டல்களால் மனமுடைந்த இவர், ஸ்ட்ண்ட் மாஸ்டராகவே பணியாற்றி வந்தார்.
மொட்டை ராஜேந்திரனின் சினிமா பயணம் உண்மையில் 2009 ஆம் ஆண்டில் தான் தொடங்கியது எனலாம். ஏனெனில் அந்த வருடம் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில், வில்லனாக மிரட்டியிருந்தார் மொட்டை ராஜேந்திரன். அதோடு இப்படத்திற்கு சிறந்த வில்லன் நடிகர் விருதையும் பெற்றார்.
அதற்கு முன்பு வரை பிதாமகன் உள்ளிட்ட ஒருசில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும், நான் கடவுள் திரைப்படம் தான் மொட்டை ராஜேந்திரனை தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியது. இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்த போது அவரது வயது 52. அந்த வயதிலும் இவரது உடல் மிகவும் ஃபிட்டாக சிக்ஸ் பேக்குடன் இருந்தது என்றால், நிச்சயமாக அது அசாத்தியமான ஒன்று தான். இன்றைய இளம் நடிகர்களில் ஒருசிலரே சிக்ஸ் பேக் வைத்துள்ளனர். ஆனால் 65 வயதைக் கடந்தும் கூட சிக்ஸ் பேக்குடன் வலம் வருவது அசாத்தியமானது என இயக்குநர் பாலா, மொட்டை ராஜேந்திரனைப் புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சிக்ஸ் பேக் என்று சொன்னாலே எனக்கு மொட்டை ராஜேந்திரன் ஞாபகம் தான் வரும். இன்றைய இளம் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைப்பதெல்லாம் பெரிதே அல்ல. 65 வயதைக் கடந்த போதிலும் நேர்த்தியான உடலுடன் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் தான் மாஸ். அவரது உடலைப் பார்த்தால் நிச்சயமாக யாராக இருந்தாலும் ஆச்சரியம் அடைவார்கள். பல வருடங்களாக சிக்ஸ் பேக் உடலை பராமரிப்பது மிகவும் கடினம். ஆனால் அதை அருமையாக செய்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்” என பாலா புகழ்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களத்துடன் திரைப்படங்கள் எடுப்பதில் இயக்குநர் பாலா வல்லவர். இவர் எடுத்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகயும், வசூல் ரீதியாகவும் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறும்.
சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள், பரதேசி மற்றும் வணங்கான் உள்பட பாலாவின் அனைத்துத் திரைப்படங்களும் கோலிவுட்டில் பிரபலமாக பேசப்பட்டவை. பிதாமகன் மற்றும் நான் கடவுள் ஆகிய திரைப்படங்களில் பாலா கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட மொட்டை ராஜேந்திரன், தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார்.