இயக்குநர் ஹரியின் தந்தை மறைவு!

இயக்குநர் ஹரியின் தந்தை மறைவு!

Published on

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் இயக்குநரும், பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மருமகனுமான ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் ஹரி, அமீர் ஜான், நாசர் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர், நடிகர் பிரசாந்த் - சிம்ரன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்தை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு விக்ரம் - திரிஷா நடிப்பில், வெளியான'சாமி' படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம் சீரிஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்தன. 

கடைசியாக தன்னுடைய மச்சினன் அருண் விஜயை வைத்து 'யானை' படத்தை இயக்கிய ஹரி, தற்போது விஷாலின் 34-ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் ஹரி பிரபல நடிகர் விஜய்க்குமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான பிரீதா விஜயக்குமாரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை வி.ஆர். கோபாலகிருஷ்ணன்(88) வயது மூப்பு காரணமாக காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தூத்துக்குடியில் மளிகை கடை நடத்தி வந்த இவர், தன்னுடைய மகன் முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்த பின்னர் சென்னைக்கு வந்து தன்னுடைய மகன் - மருமகளுடன் வசித்து வந்தார்.

தற்போது இவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com