
இந்திய சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் ஆண்டுதோறும் பல படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் ஒருசில படங்கள் மட்டுமே ரசிகர்களையும், பொதுமக்களையும் கவர்கின்றன. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பெரிய நடிகர்களின் படங்கள் கூட, சில சமயம் தோல்வியின் பிடியில் சிக்குகின்றன. இந்நிலையில் ஒரு நல்ல படம் எப்படி இருக்க வேண்டும் என பிரபல இயக்குநர் எச்.வினோத் சமீபத்தில் தெரிவித்தார்.
பான் இந்தியப் படங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், சிறு பட்ஜெட் படங்களும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நல்ல படத்தை எடுக்க அதிக பட்ஜெட் தேவையில்லை என்பதையும் சில படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. பெரிய மாஸ் ஹீரோக்கள் அதிக பட்ஜெட்டில் நடித்தால் மட்டுமே வரவேற்பு இருக்கும் என்ற நிலையே சினிமாவில் நிலவி வருகிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில், எதார்த்தமான படங்களுக்கு பெரிய நடிகர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்.
தமிழ் சினிமாவில் இன்றைய புதுமுக இயக்குநர்கள் பலரும் முதல் படத்தில் எதார்த்தமான கதைகளை சிறப்பாக கையாள்கின்றனர். முதல் பட வெற்றிக்குப் பிறகு, பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது சற்று தடுமாறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. கதாநாயகனை நம்பாமல் கதையை மட்டுமே நம்பி எடுத்த பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், பெரிய நடிகர்களுக்கு ஏற்றவாறு கதையை எழுதுவதோ அல்லது மாற்றியமைப்பதோ நிச்சயமாக வெற்றியைத் தராது.
நல்ல கதைகள் அப்படியே திரைக்கு வந்தால், யார் நடித்திருந்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம். எங்கள் வேலையில் தயாரிப்பாளர்கள் மற்றும் மாஸ் நடிகர்கள் தலையிடாமல் இருந்தாலே போதும் என்கின்றனர் சில இயக்குநர்கள்.
நல்ல படங்கள் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இயக்குநர் எச்.வினோத், “சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதோ, பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதோ அல்லது வசூல் சாதனை செய்வதோ சிறப்பு கிடையாது. இப்படியான படங்களை நல்ல படங்கள் என்றும் சொல்லி விட முடியாது. சாதாரண ஒரு மனிதனை நல்ல மனிதனாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கும் படம் தான் நல்ல படமாக கருதப்படும். அதைவிடுத்து அதிக பொருட்செலவு செய்து பிரம்மாண்டமாக படம் எடுத்து என்ன பயன்? சினிமா பலரை வாழ வைக்கிறது. அவ்வகையில் நல்ல கருத்துகளை மக்களுக்கு கூறுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
சதுரங்க வேட்டை, வலிமை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் எச்.வினோத். இவரது படத்தில் கதைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே இவர் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றன.
தமிழ்த் திரையுலகில் சமீபத்தில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் சரியாக வசூலைக் குவிக்கவில்லை. மாறாக சிறு பட்ஜெட் படங்கள் வசூலைக் குவிப்பதோடு, நல்ல விமர்சனத்தையும் பெறுகின்றன. ஆன்லைன் ஓடிடி தளங்கள் வந்த பிறகு சிறு பட்ஜெட் படங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.