
தென்மாவட்டங்கள் ஏற்பட்டுள்ள மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் அவதூறுகளுக்கு பதில் அளித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் பெருமளவில் பாதித்திருக்கிறது. பெருமளவிலான வீடுகள் தண்ணீரில் மூழ்கியதால் வீட்டில் இருந்த உபயோக பொருட்கள், ஆவணங்கள் என்று வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்திருக்கின்றன.
மேலும் மழை நின்று மூன்று நாட்களாகியும் மக்களினுடைய வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.பெரும் பகுதிகளில் மழை நீர் வடியாமல் மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு இன்னல்களுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக காற்றின் கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக இத்தனை பெரிய மழை பெய்தது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. இதனால் சேதம் பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல இயக்குனரும் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவருமான மாரி செல்வராஜின் சொந்த ஊர் மழை வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜூம் தனது நண்பரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மீட்பு பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து களத்தில் இருந்து மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் சிலர் மாரி செல்வராஜ் அடுத்த படத்திற்கு கதை சேகரித்து வருகிறார். அதிகாரிகளுக்கு உத்தரவிட அவர் யார் என்று பல்வேறு வகையில் அவதூறுகளை பரப்பு வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது”. #southrain என்று பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக தொடர்ந்து பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், வெறுப்பு அரசியல். வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார் ; ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார் பதிவிட்டுள்ளார்.