Director Ram movies that speak humanity
Director Ram movies that speak humanityhttps://tamil.filmibeat.com

மானுடத்தையும் மாந்தர்களையும் பேசும் இயக்குநர் ராம் திரைப்படங்கள்!

ங்கர் பச்சன், பாலு மகேந்திரா ஆகிய இயக்குநர்களின் வழிகாட்டலில் வந்த மானுட இயக்குநர் ராமின் திரைப்படங்கள் யதார்த்தம் நிறைந்த கதைக்களம் கொண்டவை. மக்களின் இயல்புமுறை மற்றும் வாழ்வியலை புரிந்து ஒரு யதார்த்த படைப்பைக் கொடுப்பது மிகவும் கடினமான ஒன்று.

இயக்குநர் ராம் இதுவரை, கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் ரசிகர்களின் வாழ்க்கைக்கு மிக அருகில் இருந்து, மனதில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தையும் ஏற்படுத்துபவையாக இருந்தன.

இயக்குநர் ராமின் முதல் படமான, ‘கற்றது தமிழ்’ 2007ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் மானுடவியல் படிப்புகளுக்கான இடத்தைப் பற்றி சொல்லியிருப்பார். இந்தப் படம் தமிழ் படித்த ஒவ்வொருவரின் குமுறலாகவே இருந்தது. சென்னை நகரம் தனது முகத்தை மாற்றிக்கொண்ட அந்தக் காலத்தில் வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியாதவர்களின் வாழ்க்கை முறையை, இன்னொரு மேல்தட்டு வாழ்க்கைமுறை (Globalization) தொந்தரவு செய்வதைப் பற்றி இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லியிருப்பார் இயக்குநர் ராம்.

2013ம் ஆண்டு வெளியான தங்க மீன்கள் படம் ஒரு தந்தை-மகள் உறவு பற்றிய கதைக்களம். உலகமயமாக்குதலின் விளைவு தொடக்கப்பள்ளியில் சிறு பிள்ளைக்கு எவ்வளவு தாக்கத்தைத் தருகிறது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் கூறி இருப்பார். பொருளாதார காரணங்களினால் ஒரு தந்தை தனது குடும்பத்தை விட்டு பொருள் ஈட்ட வெளியே செல்லும்போது, அந்தக் குழந்தை எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்தப் படத்தில் யதார்த்தமான போக்கில் காட்டியிருப்பார்.

தங்க மீன்கள் படத்தில்
தங்க மீன்கள் படத்தில்https://m.facebook.com

‘தரமணி’ என்ற படம் குறிப்பிட்ட ஒரு இடத்தை மையப்படுத்தி எடுத்த திரைப்படமாகும். ‘ஒரு விவாகரத்தான பெண் மீண்டும் காதலிக்கலாமா?’ என்ற கேள்விக்கு அழுத்தமான பதிலைத் தந்திருப்பார் இயக்குநர் ராம். இந்த உலகம் எப்போதும், ‘இவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று வடிவமைத்திருப்பதை தகர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். யாருக்கு எப்போது வேண்டுமென்றாலும் மனதில் காதல் ஏற்படும் என்பதை ஆணித்தனமாகக் கூறியிருப்பார். சாதிகள், ஏற்றத்தாழ்வு என்று எதுவுமில்லை. நாம் அனைவரும் ஒவ்வொரு விதம் என்பதே இயக்குநர் ராமின் கருத்து. இப்படி, ‘தரமணி’ திரைப்படம் நவீன சமூகக் கலாசாரத்தைப் பற்றி பேசியிருக்கும்.

இயக்குநர் ராமின் 2019ம் ஆண்டு வெளியான, ‘பேரன்பு’ திரைப்படத்தில் மம்மூட்டி நடித்திருப்பார். இதுவும் ஒரு தந்தை-மகள் கதை. ஊனமுற்ற ஒரு மகளை எவ்வளவு கஷ்டப்பட்டு தந்தை வளர்க்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதைக்களம். ஒரு ஊனமுற்ற பெண் வயதுக்கு வந்தால், அவளை எப்படிச் சமாளிப்பது? அவளின்   பெண்மைப் பேசாதா? உணர்ச்சிகளும் ஊமையாகிவிடுமா? வாழ்க்கைத் துணை என்பது மனம் சம்பந்தப்பட்டதா? அல்லது ஆண் - பெண் தொடர்பானதா? போன்ற கேள்விகள் இந்தப் படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில்தான் ராமின், ‘பேரன்பு.’

பேரன்பு திரைப்படத்தில்
பேரன்பு திரைப்படத்தில்https://tamil.filmibeat.com

வயதுக்கு வந்த மகளைப் பார்த்துக்கொள்ள வேலைக்கு வைத்த பெண்ணின் துரோகம். மகளின் உணர்வுகளைப் பூர்த்தி செய்ய அவமானப்படும் அப்பா. அப்பாவின் காதல் உடையும்போது ஒரு திருநங்கையின் அன்பான அரவணைப்பு என, வாழ்க்கையில் நாம் இப்படித்தான் ஒன்றை அல்லது ஒருவரைப் பார்க்க வேண்டும் என்ற முறைகளைக் கூறும் படம் ‘பேரன்பு.’ படம் பார்ப்பவர்களின் கண்கள் வேறு பக்கம் திருப்பாமல் இருக்க, படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அற்புதமாகச் செதுக்கி இருப்பார் இயக்குநர் ராம்.

இயக்குநர் ராம் - கவிஞர் நா.முத்துக்குமார்
இயக்குநர் ராம் - கவிஞர் நா.முத்துக்குமார்https://tamil.oneindia.com

கவிஞர் நா.முத்துக்குமாரின் நெருங்கிய நண்பர் இயக்குநர் ராம். ராமும், நா.முத்துகுமாரும் சேர்ந்துதான் பாலு மகேந்திராவிடம் பயின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் நா.முத்துக்குமார் முதன்முதலில் ராமை பார்க்கும்போது ‘யார் இவர்’ என்று சலித்துக்கொண்டாராம். ஆனால், ‘நாங்கள் இருவரும் இப்படியொரு நண்பர்கள் ஆவோம் என்று சிறிதும் நினைக்கவில்லை’ என்று நா.முத்துக்குமார் தனது, ‘வேடிக்கைப் பார்ப்பவன்’ புத்தகத்தில் ராமை பற்றிக் கூறியிருப்பார்.

இயக்குநர் ராம் இயக்கிய திரைப்படங்கள் வாழ்க்கை என்பது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்ற விஷயத்தை புரிந்துக்கொள்ளும் விதமாக இருக்கும். அவருடைய திரைப்படங்கள் அனைத்துமே பல விருதுகளைப் பெற்றுள்ளன. எந்த ஒரு விஷயத்தையும் அழுத்தமாகக் கூறுவதே அவருடைய சிறப்பு. மானிடம், அன்பு, இன்னும் சில வாழ்வியல் அம்சங்கள் கொண்ட தனது படைப்புகளால் உயர்ந்து நிற்கிறார் இயக்குநர் ராம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com