சினிமாவை கொள்ளை அடிக்கும் தொழிலாக மாற்றி எதை வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம் என்ற மனநிலை உருவாகி இருப்பதாக இயக்குனர் தங்கர் பச்சான் குற்றச்சாட்டியுள்ளார்.
பிரபல சித்த மருத்துவர் கே .வீரபாகு, நடிகர் சமுத்திரக்கனியை வைத்து முடக்கறுத்தான் என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் மஹானா, சூப்பர் சுப்பராயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழிலை செய்யும் நபர்களை மையப்படுத்திய என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் முடக்கறுத்தான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் தங்கர் பச்சான் பேசியது, மருத்துவர் கே .வீரபாகு மக்களுக்காக பல சேவைகளை செய்திருக்கிறார். சித்த மருத்துவத்தில் இவர் செய்த சாதனைகள் பல. இவர் போன்ற நபர்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கொடை. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருந்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்த வேண்டும்.
இன்று சினிமா என்பது கலையாக இல்லாமல் வியாபாரமாக மாறிவிட்டது. எந்த விதமான படங்களை குழந்தைகளிடம் காட்டக் கூடாதோ, அந்தப் படங்கள் அதிகம் வெற்றி பெறுகின்றது. ஊக்குவிக்கப்படுகின்றன. நல்ல படங்களை பெரும்பான்மையான மக்கள் பார்ப்பதில்லை. ஒரு திரைப்படத்தில் 50 கொலை இடம்பெற்றது என்றால் அந்தப் படத்தின் நடிகர் மற்றும் இயக்குனருக்கு அதிகமான சம்பளம் கிடைக்கிறது. கொலைகளை படமாக எடுப்பவர்களும் கொலைகாரர்களே.
இன்று சினிமாவை கொள்ளையடிக்கும் தொழிலாக மாற்றி இருக்கின்றனர். மக்களுக்கு என்ன நிகழ்ந்தால் எனகென்ன பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டு எதை வேண்டுமானாலும் படமாக எடுத்து விடுகின்றனர். இதனால் குற்றங்கள் அதிகரித்து விட்டன. மேலும் மக்களை கொலைகளை ரசிக்கும் நிலைக்கு கொண்டு வந்து இருக்கின்றனர் சினிமா துறையினர் என்று கூறினார்.