
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நடிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் த்ரிஷா. சில படங்களில் ஹீரோயினுக்குத் தோழியாக நடித்து வந்த த்ரிஷாவுக்கு, ஒரே நாளில் திடீரென ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்ததாம். சமீபத்தில் த்ரிஷா திடீரென நடிகையானது எப்படி என்பதை மனம் திறந்தார் நடிகர் ராதாரவி.
சினிமா மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் நமக்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்றே சொல்ல முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை நழுவ விடாமல், கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மேலே வந்து வந்து விட வேண்டும். அப்படியான ஒரு வாய்ப்பு தான் நடிகை த்ரிஷாவிற்கும் ‘லேசா லேசா’ என்ற திரைப்படத்தில் கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட த்ரிஷா, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக உருவெடுத்து விட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார் த்ரிஷா. இவரின் இயற்பெயர் அனுராதிகா. தனது மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதை உணர்ந்த தாயார் உமா, த்ரிஷா என்ற பெயரில் விளம்பரங்களில் நடிக்க வைத்தார். இதன் பலனாக 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றார். அதே ஆண்டில் பிரசாந்த் - சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக சினிமாவிற்குள் நுழைந்தார். அதன்பிறகு 2002 இல் மெளனம் பேசியதே திரைப்படத்திலும் நடித்தார்.
"த்ரிஷா முழுமையான ஹீரோயினாக மாறியது 2003 இல் வெளிவந்த லேசா லேசா திரைப்படத்தில் தான். மலையாளத்தில் திரைக்கு வந்த சம்மர் இன் பெத்லகேம் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் லேசா லேசா என உருவானது. லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க மும்பையைச் சேர்ந்த ஒரு நடிகை ஒப்பந்தமானார். ஆனால் முதல் நாள் ஷூட்டிங் அன்று அவர் வராததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை நடிகையாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டது.
அதன்பின் நடிகைக்கான தேர்வில் 5 முதல் 6 பெண்கள் தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினர். அதில் த்ரிஷா நன்றாக நடித்தது மட்டுமின்றி, மற்றவர்களை விட அழகாக இருந்ததால் நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரே இரவில் த்ரிஷாவின் சினிமா பயணமே மாறி விட்டது. ஒருவேளை மும்பை நடிகை சரியான நேரத்திற்கு வந்திருந்தால், த்ரிஷாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது" என சமீபத்தில் ராதாரவி குறிப்பிட்டிருந்தார். இப்படத்தில் கர்னல் ராஜசேகர் வேடத்தில் ராதாரவி நடித்திருந்தார்.
லேசா லேசா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் த்ரிஷாவுக்கு குவிந்தன. அதே ஆண்டில் சாமி, அலை, மனசெல்லாம் மற்றும் எனக்கு 20 உனக்கு 18 ஆகிய நான்கு படங்களில் நடித்தார். இதில் சாமி திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் த்ரிஷா. இவரது சினிமா பயணத்தில் கில்லி, திருப்பாச்சி, சாமி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, 96 மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் மெகாஹிட் வெற்றியைப் பதிவு செய்தன.